யானை திரை விமர்சனம்!

சாமி ஸ்கொயர் சற்று சறுக்கியதால் ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இயக்குனர் ஹரி இருந்தார். மேலும் சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த அருவா படமும் பல்வேறு பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஹரி தனது மைத்துனரை வைத்து இயக்கிய படம்தான் யானை. எப்படியும் கமர்ஷியல் ஹிட் கேரண்டி என்ற முனைப்புடன் இருவரும் இணைந்தனர்.
இப்படமும் ஹரி ஃபார்முலாதான் ஆனால் கொஞ்சம் வேகம் குறைவு. ஒரு கொலை அதனால் பிரிந்துஇருக்கும் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் என இரண்டு ஊர்கள். ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிஆர்வி(ராஜேஷ்) குடும்பம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சமுத்திரம்(வ ஐ ஜே. ஜெயபாலன்) குடும்பத்துடனான அவர்களின் போட்டியைச் சுற்றி படம் சுழல்கிறது. கதாநாயகன் ரவிச்சந்திரன் (அருண் விஜய்) PRV குலத்தின் இளைய மகன், மேலும் அவர்களின் பாதுகாவலரும் ஆவார். அவர்தான் சமுத்திரம் (ஜெயபாலன்) மற்றும் அவரது மகன் லிங்கம் (ராமச்சந்திர ராஜு) ஆகியோரின் வழியில் நிற்கிறார், அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினரின் மரணத்திற்கு காரணமான குடும்பத்தை வீழ்த்த விரும்புகிறார்கள். PRV வீட்டு மகளான செல்வி (அம்மு அபிராமி) தனது முஸ்லீம் காதலனுடன் ஓடிப்போகும்போது, ரவியை அவனது ஒன்றுவிட்ட சகோதரர்கள், குறிப்பாக மூத்தவரான ராமச்சந்திரன் (சமுத்திரக்கனி) ஒதுக்கி வைப்பதால், அது அவர்களுக்கு சரியான வாய்ப்பை வழங்குகிறது. பெண்ணின் முடிவில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை ரவி அவர்களுக்கு உணர்த்தி, லிங்கம் தன் குடும்பத்தை அழிக்காமல் தடுத்தாரா? அண்ணன்கள் ரவியை ஏற்றுக்கொண்டார்களா என்பதே யானை படத்தின் கதை.
ஹரியின் வழக்கமான எல்லா அம்சங்களும் இதிலும் இருக்கின்றன. குடும்ப சென்டிமென்ட், பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள், சாதி, மதம் கடந்த காதல் என தனது வழக்கமான டெம்ப்ளேட்டிலேயே இப்படத்தையும் எடுத்துள்ளார். ஆனால் இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளபடியாக உள்ளதே ஹரியின் மேஜிக்.
அருண் விஜய் இப்படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக உயர்ந்துள்ளார். இதற்கு முன்பு சில படங்களில் பண்ணியிருந்தாலும் இப்படத்தில் சண்டைக்காட்சிகளில் வெறியேற்றியுள்ளார். குறிப்பாக ஒயின்ஷாப்பில் நடக்கும் சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சியில் அனல் பறக்கிறது. காதலியாக பிரியா பவானி சங்கர் சில இடங்களில் பார்க்க த்ரிஷா மாதிரியே உள்ளார். அருண் விஜய் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இடையேயான ரொமான்ஸ் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. யோகிபாபு காமெடியில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆனால் அதைஎல்லாம் விட ஒரு சோக காட்சியில் நம்மையும் அழவைத்துவிடுகிறார். அண்ணன்களாக வரும் சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் மூவரில் மூத்தவர் முத்திரை பதிக்கிறார். ஜிவி.பிரகாஷ் குமாரின் பாடல்கள் சுமார்தான். ஆனால் பிண்ணனி இசையில் பிரம்மாண்டம் கூட்டியுள்ளார்.
படத்தில் சாதிவெறி, சுயநலம் கொண்ட பணக்காரர், சமூக நீதி என சகலமும் பேசியுள்ளார் ஹரி. மேலும் ஹரி தனது கதாபாத்திரத்தின் பரிமாணத்தை அழகாகக் கட்டமைத்தார். ரவியும் கூட சரியானவர் அல்ல, அவரது பார்வைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன, மேலும் அருண் விஜய் இந்த கதாபாத்திரத்தில் நல்லதைக் குறிக்கும் ஒரு குறைபாடுள்ள மனிதராக நன்றாக வேலை செய்கிறார். அவர் வளர்ந்த சாதிய, ஆணாதிக்க கலாச்சாரத்தின் ஒரு விளைபொருளாக அவர் இருப்பதை நாம் காண்கிறோம், ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானத்தை எப்போதும் வைத்திருப்பார். ராதிகா இடம் பெறும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.
நாயகன் அருண் விஜய், கடந்த சில படங்களில் இவர் போலீஸ் அல்லது நகரத்து இளைஞன் உள்ளிட்ட வேடங்களிலேயே அதிகம் நடித்திருந்தார். அவருக்கு இது முற்றிலும் மாறுபட்ட படமாகவே உள்ளது. இதில் முழுக்க முழுக்க கிராமத்து இளைஞனாக வருகிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் யானை பலம் கொண்டவராக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் எதிரிகளை பறக்கவிட்டு அப்ளாஸ் அள்ளுகிறார். அதேபோல் செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலங்க வைக்கிறார்.
மொத்தத்தில் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

