வற்றிப்போனதா வைகை நதி : வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” விமர்சனம்!
![]()
வைகைப் புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காவிட்டாலும் தனது முந்தைய படங்களின் நகைச்சுவை காட்சிகளின் மூலமும் மீம்ஸ் மூலமும் இன்னமும் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். அப்படி நம்மை சிரிக்க வைத்தவர் நடித்த படம் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு எவ்வளவு இருக்கும். ஆனால் அனைத்தையும் தவிடு பொடி ஆக்கிவிட்டது படம்.
வடிவேலுவின் அப்பா அம்மாவிற்கு நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாததால் காலபைரவர் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொள்கின்றனர். அப்போது அங்கு வரும் சித்தர் நாய் ஒன்றை கொடுக்கிறார். இது சாதாரண நாய் இல்லை என்றும் தெய்வீகமான நாய் என்றும் சொல்கிறார். அதன்பிறகு வடிவேலு பிறக்கிறார். குடும்பமும் செல்வசெழிப்பாக மாறுகிறது. ஒருநாள் வேலைக்காரன் அந்த நாயை திருடிக்கொண்டு போக எல்லாம் போகிறது. இப்போது வடிவேலு நாய்களை திருடி பணம் சம்பாதிக்கும் தொழிலை செய்துவருகிறார். அவருக்கு ரெடின் கிங்ஸ்லி, பிரசாந்த், சிவாங்கி ஆகியோர் உதவியாளர்கள். ஒருநாள் தவறுதலாக அந்த ஏரியா ரவுடி ஆனந்தராஜின் நாயை திருடிவிடுகின்றனர். நாயை திருடிய வடிவேலுவை கொலை செய்ய ஆனந்தராஜ் துரத்த உயிருக்கு பயந்து ஊரைவிட்டு ஓட நினைக்கும் வடிவேலுவிடம் தொலைந்து போன நாய் பற்றி அவரது பாட்டி சொல்கிறார். இதனையடுத்து நாயை தேடி ஹைதராபாத் செல்கிறார் வடிவேலு. இது தெரிந்து ஆனந்தராஜ் கூட்டணியும் ஹைதரபாத் செல்கிறது. இறுதியில் நாயை கண்டுபிடித்தாரா? ஆனந்தராஜ் கும்பலிடம் இருந்து தப்பித்தாரா என்பதே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் வடிவேலு. ஆனால் காமெடி?. நாய் திருடனாக வரும் வடிவேலு அண்ட் கும்பல் செய்யும் சேட்டைகள் எதுவும் சிரிப்பை வரவழைக்கவில்லை என்பதே உண்மை. ஏற்கனவே தான் நடித்த முந்தைய படங்களின் வசனங்களை அவ்வப்போது வடிவேலு சொல்கிறார் அதுவும்கூட சிரிப்பை தரவில்லை. முதல் பாதி முழுவதும் அத்தனை காட்சிகளும் இப்படியே போக தியேட்டர்களில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். படம் முழுவதும் வடிவேலு வரும் காட்சிகள் எல்லாம் அவரது முந்தைய படங்களின் காமெடி ட்ராக் பார்ப்பது போல் இருக்கின்றது. இரண்டாம் பாதியில் படத்தை காப்பாற்றுவது ஆனந்தராஜ் கும்பல் செய்யும் சின்ன சின்ன காமெடிகள்தான். சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு பாடிய பணக்காரன் பாட்டு எப்போது வந்தது என்று தேட வேண்டி இருந்தது. அப்பத்தா பாட்டு படம் முடிந்து எல்லோரும் கிளம்பும் முன் போடுகிறார்கள். படத்தில் எக்கச்சக்க காமெடி நடிகர்கள் இருந்தும் பயனில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்த இயக்குநர் நல்ல கதையை தயார் செய்து இருக்கலாம். எனக்கு என்ட்டே கிடையாது என்று அடிக்கடி சொல்லும் வடிவேலு, மீண்டும் ஹீரோ வேஷம் போட நினைத்தால் நிச்சயம் என்ட் கார்டுதான். வைகைப் புயல் ஒரு பிறவிக் கலைஞன் ஆனால் அவரை இந்த நிலைமையில் பார்ப்பதற்கு உண்மையில் வருத்தமாகத்தான் இருக்கிறது.

