எப்படி இருக்கிறது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள “கலகத் தலைவன்”!

 

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கலகத்தலைவன். உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி படங்கள் எல்லாமே வித்தியாசமான மேக்கிங்கை கொண்டிருக்கும். தடையற்ற தாக்க, மீகாமன், தடம் என தடம் பதித்தவர் தற்போது கலகத் தலைவனை கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நிமிர், மனிதன், நெஞ்சுக்கு நீதி என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இருவரும் முதல்முறையாக இணைந்துள்ள இக்கூட்டணி வெற்றிபெற்றதா என்பதை பார்க்கலாம்.

வஜ்ரா என்னும் கார்ப்பரேட் நிறுவனம் கனரக வாகனமொன்றை சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கிறது. குறைந்த பெட்ரோலில் அதிக மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்ட வாகனம் அறிமுகமாகும் இறுதி நேரத்தில், அந்த வாகனத்தால் அதிக காற்று மாசு ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்படுகிறது. இதுகுறித்து நிறுவன உரிமையாளரிடம் தெரியப்படுத்த அவரோ அதை யாருக்கும் தெரியக்கூடாது என்று மறைக்க சொல்கிறார். ஆனால் இது எப்படியோ ஊடகங்கள் மூலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கோபமடைந்த நிறுவனத்தின் உரிமையாளர் கம்பெனியின் ரகசியம் எப்படி வெளியானது என்பதை அறிய ஆரவ்வை நியமிக்கிறார்.


தகவல் எப்படி வெளியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டதா? எதனால் அந்த ரகசியம் வெளியானது? இதற்கும் உதயநிதிக்கும் என்ன தொடர்பு என்ன என்பதே கலகத் தலைவன்.

திரு என்னும் கதாப்பாத்திரத்தில் பொருளாதார ஆய்வாளராக உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் நடித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி படத்திற்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு சமூக அக்கறையுள்ள படத்தை கொடுத்துள்ளார். தன்மீதுள்ள எதிர்பார்ப்பை ஓரளவுக்கு உதயநிதி பூர்த்தி செய்துள்ளார். அவரின் நடிப்பு படத்திற்கு படம் மெருகேறி வருகிறது. காதல் காட்சிகள், ஆக்ஷன் என தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடித்துள்ள நிதி அகர்வால் காதல் நாயகியாக வந்து செல்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆரவ் தான் படத்திற்கு பெரிய பலமாக உள்ளார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆரவ் அதற்கான மெனக்கெட்டு இருப்பது நன்றாக தெரிகிறது.

பாடல்கள் சுமார். ஶ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை நன்றாக படத்திற்கு உதவியுள்ளது. தில்ராஜின் ஒளிப்பதிவு படத்தின் அழகியலை கூட்டியுள்ளது.

மகிழ் திருமேனியின் முந்தைய படங்களை போலவே இந்த படத்திலும் தன்னுடைய பாணியை அவர் பின்பற்றி உள்ளார். அரசு நிறுவனத்தை கார்ப்பரேட் வசம் சென்றால் என்னென்ன விளைவுகள் வரும் என்பதை இப்படத்தில் சொல்லியுள்ளார். எங்கோ ஓர் இடத்தில் ஒரு கார்ப்பரேட் முதலை அரசு நிறுவனத்தை விலைக்கு வாங்குவதன் மூலம் ஏதோ ஒரு இடத்தில் உள்ள சிறு தொழில்கள் அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன‌. கார்ப்பரேட் பெரு முதலைகள் தங்கள் சுய லாபத்திற்காக எத்தனை உயிர்களை காவு வாங்குகிறது என்றெல்லாம் இதில் சொல்லி அதிர்ச்சி அளித்துள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனம், பொருளாதாரம், அதனால் சாதாரண மனிதன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை பதிவு செய்ய முயற்சி செய்துள்ள இயக்குனரின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. அதே நேரத்தில் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

மொத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் ஒரு அரசையே விலைக்கு வாங்கி ஆட்டுவிக்க முடியும் என்பதை கலகத் தலைவன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments