“தி லெஜண்ட்” திரை விமர்சனம்!

தி லெஜண்ட் திரை விமர்சனம்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் தன்னுள் இருந்த நடிப்பு ஆசையால் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து நடித்துள்ள படம்தான் தி லெஜண்ட். இப்படத்தின் திரை விமர்சனம் இங்கே.

மருத்துவத் துறையில் சாதனை படைத்த விஞ்ஞானியான சரவணன் உலக நாடுகளின் அழைப்பை நிராகரித்துவிட்டு தனது ஊர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனது சொந்த ஊர் வருகிறார். இங்கே தனது பள்ளித் தோழனான ரோபோ சங்கர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிகிறார். அவர் மட்டுமின்றி அவரது மனைவி குழந்தைகளுக்கும் சர்க்கரை வியாதி இருப்பதை நினைத்து வேதனைப்படுகிறார். இதனால் சர்க்கரை வியாதிக்கான மருந்தை தயாரிக்க முயற்சி செய்கிறார். இது மருத்துவ ஃமாபியாவான தொழிலை செய்து வரும் சுமனுக்கு பாதிப்பாக அமைகிறது. இதனால் சரவணன் மருந்து தயாரிக்க இடைஞ்சலாக இருக்கிறார். இறுதியில் சரவணன் மருந்து தயாரித்து நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா? எதிரிகளை பழி வாங்கினாரா என்பதுதான் தி லெஜண்ட் படத்தின் கதை. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் சாராம்சத்தை அப்படியே எடுத்து ஹிட் அடித்த சில படங்களின் மாஸ் மசாலாக்களை தடவி பரிமாறி உள்ளனர் இரட்டை இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி.

வெற்றி ஃபார்முலாவான ஐந்து பாடல்கள்-ஆறு-சண்டைகள் என அனைத்தையும் பக்காவாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால் சரவணன் தான் நடிப்பு கிலோ என்ன விலை என்று கேட்கிறார். எந்த அறிமுக நடிகருக்கும் இல்லாத வகையில் முதல் படத்திற்கே அதிகாலை 4 மணி காட்சிகள். ஹவுஸ் ஃபுல் காட்சிகள் என கலைகட்டியது திரையரங்குகள். ஆனால் இதுமட்டும் போதுமா ரசிகர்களை திருப்திபடுத்த. கிட்டத்தட்ட அனைத்து காட்சியிலும் சரவணன் வருகிறார் கேமராவை பார்த்து வசனம் பேசுகிறார். சீரியஸாக அவர் பேசும் போது திரையரங்குகளில் சிரிப்பு சத்தம் பட்டாசாய் வெடிக்கிறது. அவரால் முடிந்த வரை நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள் சிறப்பாக உள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் காட்சிகள் பார்க்கும்போது மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது.

முதல் பாதியில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் கலகலப்பாக காட்சிகளை நகர்த்துகிறார். அவரது மறைவு நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு இழப்பு தான். இரண்டாம் பாதி யோகி பாபு வசம்‌. எப்போதும் போல காமெடியில் நம்மை சோதிக்கிறார்.

நாசர், பிரபு, விஜயகுமார், தேவதர்ஷினி, சச்சு மற்றும் தம்பி ராமையா போன்ற மூத்த நடிகர்கள் இதில் இருந்தாலும் பயனில்லை. கீத்திகா மற்றும் ஊர்வசி ரவுத்தேலா என இரண்டு நாயகிகள் கதைக்கு தேவையா என தெரியவில்லை. மொத்தத்தில் நடிக்க நினைத்தது அவர் தவறில்லை. அதற்காக இன்னும் உழைப்பு நிறைய தேவை அவருக்கு. அடுத்த படத்தில் தன்னை நிரூபிப்பார் என்று நம்புவோம்.

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments