சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: கே. பாக்யராஜ் பேச்சு!
கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் ‘செஞ்சி’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகிய திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்கள்.
இயக்குநர் பேரரசு கூறும்போது,
“சினிமா எத்தனையோ பேரைப் பார்த்து இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு புத்திசாலியை, கெட்டிக்காரத்தனம் உள்ளவரைப் பார்த்ததில்லை. சினிமாக் கனவோடு வந்து திருமணமாகாமல் சிரமப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கும் பலரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் சிரமப்பட்டு சம்பாதித்துக் குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். இது புதிதாக இருக்கிறது. இப்படியும் சினிமாத்துறைக்கு வரலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
செஞ்சி என்பது என்னுடைய தலைப்பு .அதைப் புதுப்பிக்காததால் இவர் எடுத்துக் கொண்டு விட்டார்.ஒரு படம் எப்படி இருக்கும் என்பதை அதன் தலைப்பைப் பார்த்தாலே அதில் உள்ள வடிவமைப்பைப் பார்த்தாலே தெரிந்து விடும். இவர் செஞ்சி என்பதைச் சாதாரணமாக அந்தப் பெயரைப் போடாமல் அதில் மெனக்கட்டு செய்துள்ளார். நானும் ஊர்ப் பெயர்களில் படங்கள் எடுத்துள்ளேன். இந்தப் படத்தை அங்கே எடுத்துள்ளார்கள் .அந்தக் காட்சிகள் நன்றாக உள்ளன. இந்தப் படம் வெற்றிபெற்று செஞ்சியில் வெற்றிக் கொடியும் பறக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது,
தவறான வழியில் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பவர்கள் என்று நான் நடிகர்களை மட்டும் சொல்லவில்லை. லஞ்சம், ஊழல், மோசடிகள் செய்து தவறான வழிகளில் கோடிக்கணக்கில் சம்பாதித்து அதை அனுபவிக்க முடியாமல் வெறும் காகிதக் குப்பைகளாக போட்டுவிட்டு செல்லும் பலருக்கும் நான் சொல்கிறேன். நீங்கள் கடவுளைத் தேடி கோவில் கோவிலாக அலைய வேண்டாம். அன்றாடம் சிரமப்படும் ஏழைகளைக் கண்டு அவர்களுக்கு உதவுங்கள் .அவர்கள் உங்களைக் கடவுளாக நினைப்பார்கள். தர்மம் செய்யுங்கள்.அலெக்சாண்டர் இறந்தபோது சவப்பெட்டியில் இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு வெறுங்கையோடு தான் சென்றான். தர்மம் செய்யுங்கள்.
பிரபுதேவா மீனாவை வைத்து டபுள்ஸ் படம் எடுத்து,75 லட்சம் இழப்பு வந்தது. பார்த்திபன், தேவயானியை வைத்து நினைக்காத நாளில்லை படம் எடுத்தேன்.ஒன்றே கால் கோடி இழப்பு.
இப்படி ஒன்பது படங்களை எடுத்தேன். நாலரைக் கோடி காலி என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும்போது,
“இப்பதெல்லாம் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்கிறது. வெற்றிகரமான மூன்றாவது நாள்,
வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போடுகிறார்கள். ஒரு காலத்தில் வெற்றிகரமான 25வது நாள், 100வது நாள் ,125 வது நாள் 175 வது நாள் என்று விளம்பரம் செய்வார்கள். இப்போது படம் வெளிவருவதே பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது. இந்த நிலையில் சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா என்று ஒன்றும் புரியவில்லை. அதே நேரம் தமிழ் சினிமா உலகின் பல நாடுகளில் ஜப்பான், கொரியா என்றெல்லாம் போய் வெளியாகிப் பேசப்படுகிறது. அங்கு இப்போது தமிழ் சினிமா என்று பேசுகிறார்கள். இப்படி ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி.
அப்படிப்பட்ட சூழலில் தான் இவர் இந்த செஞ்சி படத்தை உருவாக்கி இருக்கிறார் .நான் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அந்தப் படத்தைப் பற்றி, தயாரிப்பாளர் பற்றி, இயக்குநர் பற்றி விசாரிப்பேன். இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லை என்றார்கள் .இவர் ஒரு சுயம்புவாக வந்திருக்கிறார்.அதே நேரத்தில் குடும்பத்தின் தொந்தரவுகள் இல்லாமல் எல்லாம் செட்டில் செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பெரிய ஆள் சின்ன ஆள் என்று யாரும் பார்ப்பதில்லை .படம் நன்றாக இருந்தால் வரவேற்பார்கள். புதிய முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்கள். இந்த செஞ்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

