சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “யசோதா” பட விமர்சனம்!

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “யசோதா” பட விமர்சனம்
ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் யசோதா. தனது தங்கையின் மருத்துவ செலவிற்கு அதிக பணம் தேவைப்படுவதால் வாடகைத் தாயாக சம்மதிக்கிறார் சமந்தா. வரலட்சுமி சரத்குமார் நடத்தி வரும் வாடகைத்தாய் மையத்தில் சமந்தா அனுமதிக்கப்படுகிறார். அங்கு இவரைப் போலவே ஏராளமான பெண்கள் பல்வேறு தேவைகளுக்காக வாடகைத் தாயாக இருக்கின்றனர். ஆனால் அங்கு வேறு எதோ தவறான செயல்கள் நடைபெறுவதை சமந்தா கண்டுபிடிக்கிறார். அங்கு என்ன நடக்கிறது ? சமந்தா அதில் இருந்து தப்பித்து வந்தாரா ? என்பதை கொஞ்சம் அதிரடி கலந்து சொல்லியுள்ளனர்.

இன்று இருக்கும் அவசர உலகில் வாடகைத்தாய் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களை த்ரில்லர் ஜானரில் வெளிப்படுத்தும் கதையே ‘யசோதா’ ஆகும். இந்த வாடகைத்தாய் விவகாரத்தில் சமந்தா எப்படி சிக்கிக் கொள்கிறார், அதில் இருக்கும் பின்னணியின் உண்மைகள் வெளிச்சம் செய்வது தான் திரைக்கதையாக உள்ளது.
த்ரில்லர் கதைக்கு உரிய சஸ்பன்ஸ் மற்றும் த்ரில்லரை இறுதிவரை கொண்டுவந்தது தான் ‘யசோதா’ படத்திற்கு பலமாகும். ஒரு கற்பழிப்பு மற்றும் கொலையின் மர்மத்தில் ஆரம்பத்தில் கதை மெதுவாக நகர்ந்தாலும் சமந்தாவிற்கு விஷயம் தெரிய வரும் போது கதையும் சூடுபிடிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க வெளிநாட்டு நடிகை மர்மமான முறையில் உயிரிழக்க இந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக சம்பத் வருகிறார். பணத்திற்காக வாடகைத்தாயாக இருக்க ஒத்துக்கொள்ளும் சமந்தா, பின் இதில் இருக்கும் வியாபாரத்தை அறிந்த பின் என்ன ஆகிறது என்பதே படத்தில் சுவாரஸ்யம் ஆகும்.
கொலை விசாரணை மற்றும் வாடகைத்தாய் விவகாரம் இரண்டும் குழப்பாமல் முதல் பாகம் உணர்ச்சியாக நகர்கிறது. ஆரம்பத்தில் இருந்து தனக்கு ஏற்படும் சிக்கலை சமந்தா உணரும் அந்த வாடகைத்தாய் விவகாரம் தான் இரண்டாம் பகுதிக்கு ஆர்வத்தைக் கூட்டியுள்ளது.
சமந்தாவின் இரு மாதிரியான கதாபாத்திர நடிப்பு மற்றும் வரலட்சுமியின் கதாபாத்திரம் இந்த படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. ‘இவா’ என்னும் இந்த வாடகைத்தாய் மையத்தில் பணிபுரியும் டாக்டர் கேரக்டரில் உன்னி முகுந்தன் நடித்திருக்கிறார். இவரின் கேரக்டரின் அழுத்தம் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. மணகசர்மாவின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி மாஸ் ஹீரோக்களுக்கு உண்டான பில்டப்பை சமந்தாவிற்கு கொடுத்துள்ளது.
மொத்தத்தில் வாடகைத்தாய் விவகாரத்தில் இருக்கும் மர்மங்களைக் கூறும் மிகவும் சாதாரணமான கதை வைத்து, சுவாரஸ்யம் மங்காமல் எடுத்து சென்ற இயக்குநர்களுக்கு பாராட்டுகள்.

