கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள “விருமன்” திரைப்பட விமர்சனம் !
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, இயக்குனர் ஷங்கர் மகள் அத்தி, ராஜ் கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் விருமன். இரண்டாவது முறையாக கார்த்தி முத்தையா உடன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியையும் குடும்ப உறவு முறைகளையும் மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
விருமன் என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்தி இப்படத்தில் நடித்துள்ளார். விருமனின் தந்தை ( பிரகாஷ் ராஜ் ) ஊர் போற்றும் தாசில்தாராக உள்ளார். ஆனால் தான் செய்வது மட்டும் தான் சரி தன்னை மீறி யாரும் செயல்பட கூடாது என்ற குணத்துடன் தன் குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அவர் செய்த ஒரு தவறால் அவரது மனைவி ( சரண்யா பொண்வண்ணன் )தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் தனது தாய்மாமன் ராஜ் கிரண் அரவணைப்பில் வளரும் விருமன் தன் அண்ணன்களையும் தனது தந்தையையும் நல்வழிப்படுத்த முயற்சி செய்கிறார். பிடிவாதம் கொண்ட தனது தந்தையை விருமன் திருத்தினாரா? இல்லையா? என்பது தான் விருமன் திரைப்படத்தின் கதை.
ஆக்ஷன், காதல், குடும்ப உறவு, கிராமத்து அழகு என தன்னுடைய முந்தைய படங்களை போலவே இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் முத்தையா.
மதுரை மற்றும் தேனியை மையமாக கொண்டு அந்த பகுதி மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்களின் அன்பை இந்த படத்தின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் முத்தையா. படத்தின் நாயகன் கார்த்தி இதற்கு முன்பு முத்தையா உடன் இணைந்த கொம்பன் திரைப்படத்தை போல இந்த படம் இருக்க கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். ஆனாலும் அதையும் தாண்டி சில காட்சிகள் அந்த படங்களை நினைவுப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. கார்த்தி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான பருத்தி வீரன், கொம்பன் கைதியின் சாயல்கள் இந்த படத்திலும் உள்ளது. ஆனால் தன்னால் முடிந்த அளவிற்கு கார்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தனது சிறப்பான நடிப்பை அதிதி வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவரது தோற்றமும் பேச்சும் கிராமத்து பெண்ணை அப்படியே வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
4 பாடல்கள், 5 சண்டை காட்சிகள் என ஒரு பக்காவான கமர்ஷியல் படத்தின் மூலம் தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் முத்தையா. அதே நேரத்தில் அவரது முந்தைய படங்களின் அதே டெம்ப்லேட்டை இந்த படத்திலும் பயன்படுத்தி இருப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. இந்த படத்தில் தந்தை கதாப்பத்திரத்தில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் கண்ணுக்கு தெரிகிறது.
அம்மாவாக நடித்துள்ள சரண்யா மற்றும் தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் கிரணின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். மிக இயல்பாக எதார்த்தமாக அவர்களது நடிப்பு உள்ளது. ஆர்கே.சுரேஷ் கதாபாத்திரம் அப்பகுதி ரவுடி பயலை கண்முன் நிறுத்துகிறது. கார்த்தியுடன் இணைந்து சூரி பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் தெளிவாக தேர்வு செய்துள்ளார் இயக்குனர் முத்தையா.
அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல நம்பிக்கை என கார்த்தி பேசும் வசனங்கள் உணர்ச்சியின் உச்சத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது. ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் காட்சிகள் கிராமத்தையும் அதன் அழகையும் பதிவு செய்துள்ளது. யுவனின் பின்னனி இசை பல இடங்களில் படத்திற்கு பலமாக உள்ளது. அதே நேரத்தில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மாறி வரும் டெக்னாலஜி யுகத்தில் குடும்ப உறவுகள் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை விருமன் திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது. சில இடங்களில் கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

