மீண்டும் மேஜிக் நிகழ்த்தினாரா வெற்றிமாறன் – “விடுதலை” பார்ட் 1 திரை விமர்சனம்!
மீண்டும் மேஜிக் நிகழ்த்தினாரா வெற்றிமாறன் – “விடுதலை” பார்ட் 1 திரை விமர்சனம்!
![]()
வெற்றிமாறன் இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாக பார்க்கப்படுபவர். உண்மையான சினிமா எது என்பதை தனது ஒவ்வொரு படத்தின் மூலம் நமக்கு பாடம் எடுத்து வருபவர். திரைக்கதை தான் ஒரு படத்தின் உயிர்நாடி என்பதை தனது எல்லா படத்திலும் உறுதிபடுத்தியவர். இன்று ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை விடுதலையாக நமக்கு அளித்துள்ளார். படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
அருமபுரி என்ற ஊரில் உள்ள காட்டில் கனிம வளங்கள் எடுக்க தனியாருக்கு அரசு அனுமதி அளிக்கிறது. இதனை எதிர்த்து போராடும் ஊர்மக்கள் மீது காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். போராட்டக்காரர்களின் தலைவனாக விஜய் சேதுபதி மக்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறார். ஊர் பெண்களை சித்திரவதை செய்த இரண்டு போலீஸ்காரர்களை கொலை செய்துவிட்டு தலைமுறை வாழ்க்கை நடத்துகின்றனர் விஜய் சேதுபதி மற்றும் அவரது கூட்டாளிகள். இந்த நிலையில் மனிதநேயம் கொண்ட போலீஸ் காவலராக அந்த ஊருக்கு வருகிறார் சூரி. அரக்க குணம் கொண்ட சேத்தனுக்கும் சூரிக்கும் பிரச்சினை வருகிறது. அதனால் சூரியை பழிவாங்க நிறைய தண்டனைகள் வழங்கி கொடுமைப்படுத்துகிறார். எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் சூரிக்கும் அந்த ஊரைச் சேர்ந்த பவானிக்கும் காதல் வருகிறது. விஜய் சேதுபதியை பிடிக்க சிறப்பு அதிகாரியாக வரும் கௌதம் மேனன் அந்த ஊர் மக்களை மிகவும் சித்திரவதை செய்கிறார். இதில் சூரியின் காதலியும் ஒருத்தி. உயரதிகாரிகளிடம் போராடும் சூரி, விஜய் சேதுபதி இருக்கும் இடம் எனக்குத் தெரியும் நான் காட்டுகிறேன் என்று கௌதம் மேனனிடம் சொல்ல போலீஸ் படையுடன் செல்கிறார் சூரி. இறுதியில் விஜய் சேதுபதியை பிடித்தார்களா? சூரியின் காதலிக்கு என்ன ஆனது? போலீஸின் திட்டம் பலித்ததா? என்பதே முதல் பாகத்தின் கதை.

வெற்றிமாறன் தான் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார். ஒரு சிறுகதைக்கு இத்தனை அருமையான திரைக்கதை அமைத்து படம் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளார். விறுவிறுப்பாக செல்லும் முதல் பாகம் இடைவேளை வரும்போது கைதட்ட வைக்கிறது. இடைவேளைக்குப் பிறகு அதே விறுவிறுப்பு குறையாமல் அடுத்த பாகத்துக்கான தொடர்ச்சியுடன் இந்த பாகம் முடிவடைகிறது. சூரிக்கு இப்படம் ஒரு மைல்கல். மிக முக்கியமான படம். சிறப்பான நடிப்பு மூலம் படப்பிடிப்பு சமயத்தில் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் மருந்து தடவியுள்ளார். திரையில் சாதாரண கடைநிலை காவலராக அப்படியே இருக்கிறார். உயர்அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க சொல்லும்போது நான் நல்லதுதானே செஞ்சேன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று வீம்பாக இருந்துவிட்டு தண்டனை பெறும் காட்சிகளில் எல்லாம் மனதில் நிற்கிறார். பவானி ஸ்ரீ பழங்குடி பெண்ணாக அப்படியே இருக்கிறார். காவல்துறை நடத்தும் சித்திரவதையை தாங்கிக் கொண்டு கண்ணீர் மட்டுமே உடலில் சுமந்துகொண்டு பரிதாபம் வரவைக்கிறார். விஜய் சேதுபதி இடைவெளிக்குமுன் சில காட்சிகள் தான் அவருக்கு இடைவெளிக்குப் பிறகும் கிளைமாக்ஸ் காட்சியில் வருகிறார். அடுத்த பாகத்தில் இவரது ஆட்டம் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளையராஜா இன்றும் என்றும் ராஜா ராஜாதான். பின்னணி இசையில் படத்தின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். காட்டுமல்லி, ஒன்னோடு நடந்தா பாட்டு மெய் சிலிர்க்க வைக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் இப்படத்துக்கு மிகப் பெரிய பலம். ஆரம்பத்தில் வரும் நான்கு நிமிட ரயில் விபத்து காட்சியை ஒரே டேக்கில் எடுத்து பிரம்மிப்பூட்டியுள்ளனர். இக்கதை துணைவன் சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை தான் அடிப்படை. கிராம மக்களை போலீஸ் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றது, பெண்களை கற்பழித்துக் கொலை செய்தது, மனித உயிரை ஆடு, மாடுகளை போன்று காவு வாங்கியதுதான் இப்படம். இடைவேளைக்குப் பிறகு சற்று தொய்வு ஏற்பட்டாலும் கிளைமாக்ஸ் சிறப்பு. கௌதம் மேனன் நடிப்பும் நன்று. குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இக்கதை சொல்லப்படவேண்டிய ஒன்று. சித்திரவதை காட்சிகளை வெற்றிமாறன் படங்களில் பார்க்கும் போது நமக்குள் ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
கதாபாத்திரங்கள் அறிமுகமும் அவர்களின் குணாதிசயங்களும் கதைக்கான காரணங்களும் முதல் பாகத்தில் காட்டப்பட்டுள்ளன. இரண்டாம் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி இடையிலான உரையாடல் மற்றும் இணக்கம் உள்ளிட்டவை காட்டப்படும் என்று எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் விடுதலை வெற்றிமாறனின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ். விருதுகள் நிச்சயம்.

