சத்திய சோதனை திரை விமர்சனம்!

சத்திய சோதனை திரை விமர்சனம்!

ஒரு கிடாயின் கருணை மனு‌ படத்தின் மூலம் வியக்க வைத்த இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் சத்திய சோதனை. இப்படத்தில் பிரேம்ஜி நாயகன் என்றதுமே சற்று பயமாக இருந்தது. ஆனால் படத்தை பார்த்த பின்பு அந்த பயம் சற்று குறைந்தது. தனது முந்தைய படத்தை போலவே இந்த படத்தையும் இயல்பாக கொடுத்துள்ளார். தமிழகத்தில் ஒரு கொலை வழக்கை கிராமத்து காவல் நிலையம் எப்படி விசாரிக்கும் என்பதை காமெடி கலந்து சாட்டையடியாக கொடுத்துள்ளார். படத்தின் கதைப்படி அருப்புக்கோட்டை அருகே உள்ள சங்குப்பட்டி என்ற ஊரில் ஒரு கொலை நடக்கிறது. அந்த வழியாக சென்ற பிரேம்ஜி கொலையானவரின் உடலில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று போலீஸில் ஒப்படைக்கிறார். ஆனால் அவரை சந்தேக வழங்கில் அங்கேயே அமர வைத்து விசாரிக்கிறார்கள். இந்த நிலையில் கொலையாளிகள் வந்து சரண் அடைகின்றனர். ஆனால் கொலையானவரின் நகையை யார் எடுத்து என்று சென்றார்கள் என்று விசாரணை நடக்கிறது. இறுதியில் யார் நகையை எடுத்தது என்பதை காவல்துறை கண்டுபிடித்ததா ? பிரேம்ஜியின் நிலை என்ன என்பதே கதை.

இந்த சாதாரண கதையை வைத்துக் கொண்டு திரைக்கதையில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர். கதை எதுவாக இருந்தாலும் வலுவான திரைக்கதை இருந்தால் படத்தை ரசிக்க முடியும் என்பதை மீண்டும் இவர் நிரூபித்துள்ளார்.

ஒரு கிராமம், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு போலீஸ், ஒரு பெண் போலீஸ், ஒரு இன்பார்மர், ஒருசில கைதிகள், சந்தேகத்தின் பேரில் கைதான பிரேம்ஜி, ஒரு பாட்டி இவர்கள் தான் மொத்த படமும். இவர்களை வைத்து சகலத்தையும் தொட்டு அடித்து துவைத்துள்ளார் இயக்குனர். பிரேம் ஜி நல்லவேலையாக ஓவர் ஆக்டிவ் செய்யவில்லை. வருங்கால மனைவியை பார்க்க வந்த இடத்தில் தேவை இல்லாமல் பிணத்தை பார்த்து மாட்டிக்கொண்டு முழிக்கும் கதாபாத்திரம். சிறப்பாக செய்துள்ளார். காணாமல் போன நகைகளை கண்டுபிடிப்பதற்குள்ளயே அதனை பங்கு போட இரண்டு காவல் நிலைய போலீசார்கள் எப்படி எல்லாம் திட்டம் தீட்டுகின்றனர் என்பதையும் காவல் துறையில் நடக்கும் விசாரணை எப்படி இருக்கும் என்பதையும் அப்படியே காட்டியுள்ளனர். நாயகி சயம் சித்தாவுக்கு பெரிதாக வேலையில்லை. படத்தின் மையமே இரண்டு போலீஸ்காரர்கள்தான். சுப்பிரமணியம் படத்தில் நடித்த சித்தன்‌மோகன் மற்றும் செல்வமுருகன் இருவரும் கச்சிதம். இயல்பாக நடித்துள்ளனர். லட்சுமி பாட்டியின் நடிப்பு அமர்க்களம். போலீஸ் கண்ணிலேயே விரல் வீட்டு ஆட்டுகிறார். நீதிபதியாக நடித்துள்ள பேராசிரியர் ஞானசம்பந்தம் நடிப்பு நன்று.

கதையை‌ மட்டுமே நம்பி படத்தை இயக்கியுள்ளார் சுரேஷ் சங்கையா. ஆர்வி சரணின் ஒளிப்பதிவு கிராமத்து செழுமையை அழகாக படம் பிடித்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் காவல் நிலையத்தை சுற்றித்தான் நகர்கிறது. அதனை காட்சிப்படுத்திய விதம் நன்று. ரகுராமின்‌ பின்னணி இசை தேவையானதை செய்துள்ளார். வசனங்களில் சமகால அவலங்களை அட்டகாசமாக கிண்டலடித்துள்ளனர். அதுவும் கொலைகாரன் ஒருவரின் பெயர் என்ன என்று போலீஸ் கேப்பார் அதற்கு வைரமுத்து என்பான். பேர் எல்லாம் நல்லாதான் வெச்சு இருக்க ஆனா நடவடிக்கை சரியில்லையே என்று போலீஸ் சொல்வார் இப்படி துணிந்து பல வசனங்கள் இருக்கின்றன.‌ படம் போரடிக்காமல் சென்றாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. மொத்தத்தில் சத்திய சோதனை – சாதனை.‌ ரேட்டிங் 3/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments