எப்படி இருக்கிறது “பொன்னியின் செல்வன்” : விமர்சனம்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். எம்ஜிஆர் தொடங்கி பலரும் படமாக்க நினைத்து முடியாமல் போன விஷயத்தை மணிரத்னம் சாத்தியப்படுத்தியுள்ளார். அதற்கு லைகா புரொடக்சன்ஸ் கைகொடுத்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர். தங்களது மன்னர்களைக் கொன்றதால் சோழர்களைப் பழிவாங்கத் துடிக்கும் பாண்டியர்கள் ஒருபுறம், அதிகாரப் போட்டியின் காரணமாக தங்களுக்குள் மோதிக்கொள்ளும் சோழ வம்சம் மறுபுறம் என நகர்வதே இத்திரைப்படம். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக நந்தினி என்ற கதாபாத்திரத்தின் பழிவாங்கல் தான் முக்கியமானதாக இருக்கும்.

ஐந்து பாகங்கள் கொண்ட கதையை மூன்று மணிநேர படமாக சுருக்குவதென்பது முடியாத காரியம் என்பதால் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆதித்த கரிகாலன் அறிமுகத்தோடு துவங்கும் இப்படம் இறுதிவரை நம்மை கட்டிப்போட்டு வைக்கிறது.

மன்னர்கள் காலத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த நிலப்பரப்பை காட்சியாகக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறது பொன்னியின் செல்வன். ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது சந்திக்கும் பல சிக்கல்களை பொன்னியின் செல்வன் திரைப்படமும் சந்தித்துள்ளது. அனைத்து விஷயங்களையும் சொல்ல முடியாத காரணத்தால் ஒரு தொடர்பே இல்லாமல் பிட்டு பிட்டாக கதை நகர்வது போன்று பார்வையாளர்களுக்கு தோன்றலாம் . நாவலுக்கென்று இல்லாத வர்ணனை கட்டுப்பாடு காட்சி மொழிக்கு பொருந்தாததால் முக்கியமான காட்சிகளை சொல்லியே ஆகவேண்டும் எனும் கட்டாயம் இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவை சரியான முறையில் சொல்லப்பட்டிருக்கிறதா என்கிற கேள்வி திரைப்படத்தைப் பார்க்கும்போது எழுகிறது.

பல தரப்பட்ட கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களத்தில் யார் யாருக்கு என்னென்ன பாத்திரம்? எதற்காக குறிப்பிட்ட கதாபாத்திரம் இப்படி நடந்து கொள்கிறது? இதற்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்? என்கிற கேள்விகள் முழுமையான விடை கொடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். படத்தின் அழகு ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அமைப்பு. அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்திக்கு இது வாழ்நாள் சாதனை படம். அவருக்கே உண்டான இயல்பான காமெடி இப்படத்தில் சிறப்பாக வெளிப்பட்டு உள்ளது. ஆழ்வார்கடியான்நம்பியாக வரும் ஜெயராம் கலக்கிவிட்டார். நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பேரழகி. குந்தவை த்ரிஷா சிறப்பு. இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரத்னமாக ஜொலிக்கின்றன. இதுதான் படத்தின் வெற்றிக்கு சான்று.

ஏஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையில் பிரம்மிப்பூட்டியுள்ளார். சிஜி காட்சிகள் உறுத்தலாக தெரியவில்லை. ரவி வர்மாவின் கேமரா அழகு. குறைகள் இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகராக குறைகளை மறந்துவிட்டு நிறைகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியனின் பெருமையை உலகத்துக்கு பறைசாற்றும் வகையில் உலக படங்களுக்கு சாவல் விடும் படமாக அமைந்துள்ளது இப்படம். தமிழன் பெருமையை மட்டும் இல்லை தமிழ் சினிமாவின் தரத்தையும் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை நிரூபிக்கும் படமாக அமைந்துள்ளது. இந்திய சினிமாவுக்கு ஒரே தலை சிறந்த  இயக்குநர் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் இயக்குநர் மணிரத்னம் ஒவ்வொரு காட்சிகளில் நமக்கு பிரமிப்பை கொடுத்துள்ளார்.

சரியான கிளைமாக்ஸ் உடன் படத்தை முடித்துள்ளார். இரண்டாம் பாகத்துக்கான லீட் படத்துக்கு மிக பெரிய பலம்.
மொத்தத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் இனிவரும் திரை முயற்சிகளுக்கு தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments