லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் “கனெக்ட்” திரைப்பட விமர்சனம்!
![]()
மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ், அனுபம் கேர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கனெக்ட். ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ளது.
வினய் , நயன்தாரா தம்பதி தனது ஒரே மகளுடன் வாழ்ந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதால் மருத்துவரான வினய் மருத்துவமனையிலேயே இருக்கிறார். நயன்தாராவின் தந்தையான சத்யராஜ் வேறு ஊரில் உள்ளார். நயன்தாராவும் அவரது மகளும் வீட்டில் தனியாக இருக்கின்றனர். எல்லோருமே வீடியோ காலில் மட்டுமே பேசிக்கொள்கின்றனர். இந்நிலையில் கொரோனாவால் வினய் இறந்து விடுகிறார். இதனால் நயன்தாராவும் மகளும் தாங்க முடியாத துயரத்தை அனுபவிக்கின்றனர். அப்பா மீது அளவுகடந்த பாசமுள்ள மகள் அவருடன் பேச நினைக்கிறார். இதனால் ஒரு மந்திரவாதி மூலம் ஆன்லைன் வீடியோ காலில் முயற்சி செய்கிறார். ஆனால் அந்த மந்திரவாதியோ இந்த குழந்தையின் மீது கெட்ட ஆவியை ஏவிவிடுகிறது. இதனால் தனியாக பேயிடம் மாட்டிக்கொண்ட நயன்தாரா என்ன ஆனார்? பேய் பிடித்த குழந்தை காப்பாற்றப்பட்டதா? என்பதை திகில் கலந்து கொடுத்துள்ளார் அஸ்வின் சரவணன்.

நயன்தாரா கணவனை இழந்த மனைவியாக மகள் பாசம் உள்ள தாயாக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். தன் மகளுக்கு பேய் பிடித்துள்ளதை பார்த்து கதறி அழுவது எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடுவது என முத்திரை பதித்துள்ளார். அன்பான கணவராக, தந்தையாக வினய் சில காட்சிகளே வந்தாலும் நன்று. சத்யராஜ் வழக்கமான அப்பாவாக இருந்தாலும் கதாபாத்திரம் உணர்ந்து ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த மனிதராக ஆண்டவன் மீது பற்றுள்ள நபராக நடித்துள்ளார். மகளாக நடித்துள்ள ஹானியா நபீஷா பேய் பிடித்த பெண்ணாக மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். நடிப்பும் அருமை. அனுபம் கேர் தனது அனுபவமான நடிப்பை கொடுத்துள்ளார். இதுபோன்ற ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை மிகவும் முக்கியம். பிரித்வி சந்திரசேகர் அந்த பணியை கச்சிதமாக செய்துள்ளார்.

பேயை காட்டும்போது பின்னணி இசை பதைபதைக்க வைக்கிறது. மணிகண்டனின் கேமராவும் நன்று. வீட்டுக்குள்ளேயே நடப்பது போல் இருந்தாலும் வித்தியாசமான கோணங்களில் காட்டி காட்சிகளை ரசிக்க வைத்துள்ளார். ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள திரையரங்கில் சென்று கனெக்ட் படத்தை பாருங்கள். நல்லதொரு அனுபவமாக இருக்கும்.

