நயன்தாராவின் ‘அன்னபூரணி’ திரைப்பட விமர்சனம்!
நயன்தாராவின் ‘அன்னபூரணி’ திரைப்பட விமர்சனம்!
![]()
தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதாநாயகனுக்காக எழுதப்பட்ட கதைகளைத்தாண்டி கதாநாயகியை முன்னிலைப்படுத்தி எழுதத் தொடங்கியது நயன்தாராவுக்கு பிறகு அதிகரித்தது. சமீப காலமாக ஹாரர் படங்களில் மட்டுமே தனி நாயகியாக நடித்து வந்த நயன்தாரா சற்று வித்தியாசமான கதைக் களத்துடன் நடித்துள்ள படம் அன்னபூரணி. இப்படத்தை அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
படத்தின் கதைப்படி ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் நயன்தாரா. தனக்கு கிடைத்த பெரிய வேலையை உதறித் தள்ளிவிட்டு பெருமாளுக்காக சேவகம் செய்வதே லட்சியம் என்று வாழ்பவர் நயன்தாராவின் அப்பா. நயன்தாராவுக்கு சிறு வயது முதலே அதீத நுகர்வு சக்தி உண்டு ஒரு கட்டத்தில் தான் இந்தியாவின் நம்பர் ஒன் சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் செஃப் ஆக மாறினால் அசைவ உணவுகளை செய்ய வேண்டும் அதனை சாப்பிட்டு டேஸ்ட் பார்க்க வேண்டும் என்பதால் நயன்தாராவின் கனவுக்கு அப்பா தடை போடுகிறார். ஆனாலும் தனது சிறு வயது நண்பரான ஜெய்யின் உதவியுடன் இன்ஜினியரிங் படிப்பதாக கூறி கேட்டரிங் கல்லூரியில் சேர்கிறார். இது ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு தெரிய வர மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு நடக்கிறது. இது பிடிக்காத நயன்தாரா வீட்டை விட்டு ஓடி விடுகிறார். இதனால் அப்பா கோபம் அடைகிறார். சென்னைக்கு செல்லும் நயன்தாரா தலைசிறந்த சமையல் கலை நிபுணரும் தான் குருவாக நினைக்கும் சத்யராஜ் வேலை செய்யும் ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார் அங்கு இவரை திறமையை பார்த்து சத்யராஜ் இவருக்கு ஊக்கம் தருகிறார். இது அவரது மகனான கார்த்திக் குமாருக்கு கோபத்தை வரவழைக்கிறது. வேலை செய்யும் இடத்தில் தனக்கு ஏற்படும் தடங்கல்கள், சிக்கல்கள், அவமானங்கள் இதை எல்லாம் கடந்து எப்படி தனது லட்சியத்தை அடைகிறார் என்பதே இந்த அன்னபூரணி.

நயன்தாரா தனி ஒருத்தியாக இப்படத்தை தாங்கி நிற்கிறார். முதல் பாகத்தில் துறுதுறு பெண்ணாக கவர்கிறார். சிறு வயது நயன்தாரா வேடத்தில் நடித்த சிறுமியும் நடிப்பால் ரசிக்க வைக்கிறார். இடைவேளை காட்சியில் தனக்கு நடந்த துயரத்தை எண்ணி கதறி அழும் காட்சியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மிளிர்கிறார். ஜெய் நயன்தாராவின் நண்பராக ஒதுதலையாக காதலிப்பவராக பரிதாபம் அள்ளுகிறார்.
நயன்தாராவின் அப்பாவாக வரும் அத்யுத் குமார் சிறப்பாக நடித்துள்ளார். அம்மாவாக வரும் ரேணுகா, பாட்டி சச்சு, கேஎஸ் ரவிக்குமார், கிங்ஸ்லி ஆகியோர் கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர். கார்த்திக் குமார் யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் நடித்துள்ளார். எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து கோபம் வர வைக்கிறார். சத்யராஜ் இதுபோன்ற கதாபாத்திரங்கள் அவருக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. அம்மாவாசை நாற்காலி காட்சி போல் இதில் ஒரு காட்சி வருகிறது திரையரங்குகளில் சிரிப்பலை. முதல் பாதியில் தெளிவான காட்சிகள் மூலம் ரசிக்க வைத்த இயக்குனர் இரண்டாம் பாதியில் சற்று சறுக்கியுள்ளார். சமையல் போட்டி என திசை மாறி டிவி ஷோ போல் ஆகிவிட்டது. அதுவும் இதுபோன்ற படங்களுக்கே உரிய டெம்ப்ளேட் திரைக்கதை யுக்தி அயற்சியை வரவழைத்துவிட்டது. இன்னும் கொஞ்சம் மாற்றி யோசித்து இருக்கலாம். வசனங்கள் நச்.

தமனில் இசையில் பாடல்கள் நன்று. பின்னணியில் இசை படத்துக்கு என்ன தேவையோ அதனை கொடுத்துள்ளார். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு திருச்சி மற்றும் சென்னையை அழகாக காட்டியுள்ளது. பிரவீன் ஆண்டனியின் எடிட்டிங் நன்று.
அழகான கதையை சொல்ல முயன்றதற்கு இயக்குனருக்கு வாழ்த்துகள். வழக்கமான க்ளிஷே காட்சிகள் நிறைந்த இரண்டாம் பாதியால் முழுதாக ரசிக்க முடியாமல் போகிறாள் இந்த அன்னபூரணி. மொத்தத்தில் அன்னபூரணி – நிறைவில்லை. ரேட்டிங் 3.2/5.

