எப்படி இருக்கிறது அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள “டைரி” – விமர்சனம்!
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, ஷாரா, கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் டைரி. நடிகர் அருள்நிதி வழக்கம் போல தனக்கு மிகவும் பிடித்த பழக்கமான த்ரில்லர் வகைப் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த ஆண்டு இவரது நடிப்பில், ‘டி ப்ளாக்’, ‘தேஜாவு’ என தொடர்ந்து திரில்லர் ஜானரிலான படங்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது டைரி.
சீனாவில் 1995 ஆம் ஆண்டில் மாயமாக 375 என்ற எண் உள்ள பேருந்தை மையப்படுத்தி, ஏராளமான கதைகள் உருவாகி இருக்கிறது, தமிழில் முதன்முதலாக ‘டைரி’ எனும் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

காவல் அதிகாரி பயிற்சியில் இருக்கும் அருள்நிதி ஊட்டியில் 16ஆண்டுகளுக்கு முன் விடைதெரியாமல் இருக்கும் கொலை வழக்கு ஒன்றை பயிற்சிக்காக எடுக்கிறார். அந்த வழக்கில் ஏதேனும் புதிய தடயங்கள் அல்லது குற்றவாளிகளை இனம் காண முடிகிறதா? எனும் கோணத்தில் வழக்கு ஒன்றை இவர் தெரிவு செய்கிறார். அந்த வழக்கிற்கான விசாரணையை இவர் சரியான கோணத்தில் நடத்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை
கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், இதனை திரைக்கதையாக உருவாக்குவதிலும், கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்நிதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்திற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. படத்தின் முதல் பகுதியில் கதையின் நாயகனான அருள்நிதி, சில காட்சிகளில் மட்டுமே வருவது பார்வையாளர்களுக்கு பெரும் குறையாக தோன்றுகிறது. நல்ல விறுவிறுப்பான த்ரில்லர் படத்திற்கு உரிய முதல் பத்து நிமிடங்கள் சிறப்பாக இருந்தது. ஆனால் அதனை தொடர்ந்து வரும் விசாரணை காட்சிகள் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கதை என திரைக்கதை வேறு திசையை நோக்கிச் சென்றுவிட்டது. இது த்ரில்லர் படமா, ஹாரர் படமா, சென்டிமென்ட் படமா என தெரியவில்லை. அனைத்து ஜானர்களும் இதில் ஆஜர் ஆகின்றன.
ஆனால் அருள்நிதி இதுபோன்ற திரில்லர் ஜானரிலான திரைக்கதைகளில் அவருடைய பங்களிப்பு குறைவாக இருக்கும் என்பதாலும், தோற்றப்பொலிவு, உடல் மொழி குறித்து அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்பதாலும், இது போன்ற திரைக்கதைகளை தொடர்ந்து தேர்வு செய்கிறார் என தெரிய வருகிறது. இருப்பினும் இந்த ‘டைரி’ படத்தில் அவருடைய போலீஸ் தோற்றம், கம்பீரம், மிடுக்கு ரசிக்க வைக்கிறது.
கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் பவித்ரா மாரிமுத்து, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை ரகம். இடைவேளைக்குப் பிறகு மெல்ல சூடுபிடிக்கும் திரைக்கதையில் அடுத்தடுத்து அவிழும் முடிச்சுக்கள் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் சிறப்பானதாக இருந்தாலும் கடைசி பத்து நிமிட ட்விட்ஸ்டுக்காக முதல் ஒன்றரை மணி நேரத்தை பொறுமையாக கடக்க வேண்டியுள்ளது. வித்தியாசமான படத்தை பார்க்க நினைப்பவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.

