ராமர் வாழ்ந்தது உண்மையா? – ராம் சேது திரைப்பட விமர்சனம்!
அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நாசர், சத்யதேவ், நுஸ்ரத் பருச்சா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ராம் சேது. இப்படம் தமிழிலும் அதே பெயரில் இன்று வெளியாகியுள்ளது. தொல்லியல்துறை ஆய்வாளரான அக்ஷய் குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். கடவுள் நம்பிக்கை இல்லாத இவருக்கு ராமர் பாலம் பற்றி ஆய்வு செய்து இந்திய அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு உத்தரவு கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை தொடங்க அரசு முயற்சிக்கிறது. ஆனால் இதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய தொழிலதிபரான நாசர் இந்த வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறார். காரணம் சேது சமுத்திர திட்டத்தால் தனது கப்பல் தொழிலுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார். இதனிடையே ராமர் பாலம் குறித்து அறிக்கை தயாரிக்கும் அக்ஷய் குமார் ராமாயணமே உண்மையானது அல்ல என்பதுபோல் தனது அறிக்கையில் தெரிவிக்கிறார். இதனால் அரசிற்கு நெருக்கடி வர அக்ஷய் பணிநீக்கம் செய்யப்படுகிறார். இதனையடுத்து நாசர் அக்ஷய் குமாரை அழைத்து ராமர் பாலம் பற்றி ஆய்வு செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கிறார். இறுதியில் ராமர் பாலம் என்பது உண்மையா? நீதிமன்ற வழக்கு என்ன ஆனது என்பதே ராம் சேது திரைப்படம். மிகவும் சர்ச்சையான கதையை எடுத்து இயக்கியுள்ளார் அபிஷேக் சர்மா.
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை கடலுக்கு அடியில் 50கி.மீ. தூரத்திற்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. இது இலங்கைக்கு செல்ல ராமரால் கட்டப்பட்டது என்று புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இது உண்மையல்ல என்றும் கூறப்பட்டு வருகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பாலம் என்று சொல்கிறார்கள். தொல்லியல் ஆய்வாளரான அக்ஷய் குமார் கடலுக்கு அடியில் சென்று பாலத்தில் உள்ள மிதக்கும் கற்களை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் நம்பமுடியாத உண்மைகள் வெளிவருகின்றன. அதுமட்டுமின்றி இலங்கையில் ராவணன் வாழ்ந்ததற்கான ஆதாரத்தையும் தேடி அலைகிறார். இப்படம் உண்மைச் சம்பவங்களை வைத்து எடுத்துள்ளதாக அக்ஷய் குமார் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நுஸ்ரத் பருச்சா தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியிலும் இப்படம் நன்றாக உள்ளது. குறிப்பாக கலை இயக்கம் நன்றாக உள்ளது. குகை, கப்பலின் உள்ளே காட்டப்படும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக உள்ளது. ஏ.பி.யாக நடித்துள்ள சத்யதேவ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாசர் நடிப்பு பற்றி சொல்லவேண்டியதில்லை. ஆனால் அவரையும் இறுதியில் டம்மியாக்கிவிட்டனர். கிராஃபிக்ஸ் காட்சிகள் காமெடியில் உச்சகட்டம். லாஜிக் மீறல்களும் நம்மை ரொம்பவும் சோதிக்கின்றன. குறிப்பாக கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் இருந்து 5, 6 பேர் தப்பித்து வருவது எல்லாம் காதில் பூச்சுற்றல். இது ஒரு புனைவு கதையாக எடுத்த இயக்குனர் கொஞ்சம் லாஜிக்குடன் எடுத்திருந்தால் ஓரளவு வெற்றியாவது கிடைத்து இருக்கும். பாலிவுட்டிற்கு இன்னொரு பாக்ஸ் ஆபிஸ் பிளாப் பார்சல்.

