லியோ கர்ஜனையா ? கப்சிப் பூனையா? – திரை விமர்சனம்!

லியோ கர்ஜனையா ? கப்சிப் பூனையா? – திரை விமர்சனம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்த லியோ திரைப்படம் LCU-வா, LCU-வா என்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே சந்தேகம் நீடித்து வந்தது‌. அதற்கெல்லாம் பதில் கிடைக்கும்படி லியோ திரைப்படம் வெளியாகி அதற்கு முடிவு கட்டி இருக்கிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களை திருப்திபடுத்தியதா படம் என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி கதை தான் என்ன? என்று பார்த்தால் 2005-ல் A History of Violence என்று ஒரு திரைப்படம் வெளியானது. அந்த படத்தின் அப்பட்டமான காபி தான் என்று லியோ டிரெய்லர் வெளியான சமயத்திலேயே தகவல் பரவியது. அது முற்றிலும் உண்மை என்பது தற்போது லியோ வெளியீட்டின் மூலம் நிரூபணமானது. A History of Violence படத்தை லோகேஷ் கனகராஜ் ரீமேக் உரிமை வாங்கிவிட்டார் என்று சொன்னாலும் அதுகுறித்து அவர் எந்த பேட்டியிலும் சொல்லவில்லை.

சரி, இப்போது லியோ படத்தின் கதைக்கு வருவோம். “இமாச்சலப் பிரதேசத்தில் பேக்கரி கடை வைத்திருக்கும் பார்த்திபன் (விஜய்), தனது மனைவி (திரிஷா) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் கூலிப்படையால் பார்த்திபனின் கடையில் பிரச்சனை நடக்க, அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் கூலிப்படைகள் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிடுகிறார் பார்த்திபன். அதன் பிறகு அந்த கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் பார்த்திபனின் குடும்பத்தை பழிவாங்க துடிக்கின்றனர். ஒரு பக்கம் பார்த்திபனுக்கு இப்படி ஒரு பிரச்சனை நீடிக்க, மறுபக்கம் இவர்தான் லியோ என்று நினைத்து அவரை பிடிக்க சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரின் தாஸ் குரூப் சுற்றித் திரிகிறது.

ஒரு குடும்பத் தலைவனாக இதை பார்த்திபன் எப்படி கையாண்டார்? இவர்தான் லியோவா? போன்ற பல்வேறு விதமான முடிச்சுகள் கதை நகர, நகர அடுத்தடுத்து அவிழ்க்கப்படுகின்றன.
படத்தில் எண்ணற்ற நடிகர்கள்…. திரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், சாண்டி, மிஷ்கின் தொடங்கி, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ஜனனி வரை அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரங்களிலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். 60 விநாடிக்குள் ஒருவனை கொல்வதற்கெல்லாம் ஒரு சிறப்புத் தோற்றமா? என்று பொறுமையை சோதிக்கிறது. அனுராக் காஷ்யப் பாவம் எப்படித்தான் இந்த கதையில் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. விஜய் முதல் பாதியில் பாசமான குடும்பத் தலைவனாக அழகாக இருக்கிறார்.‌அந்த ஹேர்ஸ்டைல் ஆரம்பத்தில் ஒருமாதிரி இருந்தாலும் போகப் போக செட்டாகிவிடுகிறது. சாண்டி, மிஷ்கின் இருவரும் சிறிது நேரமே வந்தாலும் சாண்டிக்கு இன்னும் கொஞ்சம் டெரர் காட்சிகள் வைத்திருக்கலாம்.

சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் வழக்கமான வில்லன்களாக வந்துபோகின்றனர். ஒரு கதையில் வில்லன் கதாபாத்திரம் எவ்வளவு அழுத்தமாக இருக்கிறதோ அப்போதுதான் படத்திற்கு வலு அதிகரிக்கும். அது இப்படத்தில் மிஸ்ஸிங். த்ரிஷா இப்போதும் ஆப்பிள் போல பிரஸ்ஸாக இருக்கிறார். இதில் விஜய்யுடன் லிப்லாக் வேறு. கௌதம் மேனன் விஜய் கூடவே வருகிறார் நடிப்பும் நன்று.

வழக்கமான கதையாக இருந்தாலும் இதில் எல்லோரும் எதிர்பார்த்ததே லோகேஷின் திரைக்கதைதான் ஆனால் அதிலும் அவர் கோட்டை விட்டு விட்டார் என்றே தோன்றுகிறது. காட்சிக்கு காட்சி ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் தான் முதல் பாகம் முழுவதும். அவ்வளவு பெரிய நடிகரான கமலை வைத்தே விக்ரம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்து விட்டோம், இவர்களுக்கெல்லாம் என்ன? என்பது போல மமதை உருவானதோ… என்னவோ? போதைப்பொருளை ஒழிக்கத்தான் கதை எடுக்கிறேன் என்று கூறி, அந்த கதையிலேயே பள்ளிப்பருவ மகன் சிகரெட் பிடிப்பதை அப்பா ஒப்புக்கொள்வது போல கதை எடுத்தால் நியாயமா?. கழுதைப்புலி கிராபிக்ஸ் அருமை. ஆனாலும் கார் சேஸிங் காட்சியில் சிஜி சுமார். ‘மூடநம்பிக்கையால் ஒரு குடும்பம் எப்படி சீரழிகிறது, அதனால் ஒரு கெட்டவன் எப்படி நல்லவன் ஆகிறான்’ என்பதே கதையின் கருவாக இருக்கிறது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லை. பிலோமின் ராஜ் கொஞ்சம் மனது வைத்திருந்தால் இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். நீண்டு கொண்டே போகிறது.

சண்டைக்காட்சிகள் உருவாக்கம் நேர்த்தி. Flashback Portion-ல் வரும் விஜய், நான் ரெடி பாடல் அற்புதம். அனிருத்தின் பின்னணி இசை பிரமாதம். இதையெல்லாம் தாண்டி முன்னணி ஹீரோவுக்கான ஒரு மாஸ் என்ட்ரி, பஞ்ச் டயலாக் என எதுவுமின்றி ஒரு குடும்பத்தின் தலைவனாக விஜய் சிறப்பாகவே நடித்துள்ளார். திருமலை, துப்பாக்கி, மெர்சல் என முந்தைய படங்களில் உள்ள விஜய்யின் Swag-யை recreate செய்தது சூப்பர்.

ஆஹா, ஓஹோ என்று ஆர்ப்பரிக்காமல், இது விஜய் படம், லோகேஷ் கனகராஜ் இயக்கம், LCU என்ற எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்ப்பவர்களுக்கு லியோ திருப்தி அளிக்கலாம். குறிப்பாக விஜய் ரசிகர்கள் கொண்டாடலாம். ஆனால் சாதாரண சினிமா ரசிகர்களை இந்த லியோ திருப்திபடுத்துவாரா என்றால் சந்தேகம்தான்…. மொத்தத்தில் லியோ – கர்ஜனை குறைவு. ரேட்டிங் 3/5.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments