சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” திரைவிமர்சனம்

 

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப்பிறகு மீண்டும் இணைந்துள்ளது கௌதம் மேனன், சிம்பு, ஏஆர்.ரகுமான் கூட்டணி. இம்முறை வித்தியாசமான கதைக்களத்துடன். எப்படி இருக்கிறது வெந்து தணிந்தது காடு.

வெயிலே விளைநிலமாகிப் போன ஊரில் வெந்து தணிந்து வாழ்கிறார் முத்துவீரன் என்கிற சிலம்பரசன். எதிர்பாராத விதமாக காட்டுத் தீயில் சிக்கும் சிம்பு உடலில் முள்காயங்களுடன் தப்பித்து வீடு திரும்புகிறான். மகனின்‌நிலை கண்டு கலங்குகிறார் தாய் ராதிகா. காடு‌கருகியதால் காசு கேட்டுவருபவனிடம் மகன் சிம்பு வாய்ச்சவடால் விட பயந்து போன தாய் இவன் இங்கு இருந்தால் கொலைகாரன் ஆகிவிடுவான் என்று அவனது மாமனிடம் சென்று இவனையும் பாம்பே அழைத்து சென்று விடுங்கள் என்று கேட்கிறார். சிலபல வாதங்களுக்கு பிறகு மாமன் சம்மதம் தெரிவிக்க புதுத்துணி வாங்கிவிட்டு பாம்பே செல்லும் ஆசையும் உறங்கிப்போன சிம்பு எழுந்து பார்க்கையில் அதிர்ச்சி. மாமா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருக்கிறார். என்னசெய்வதென்று‌ தெரியாத சிம்பு மாமா கொடுத்த லெட்டரை எடுத்துக்கொண்டு பாம்பே கிளம்புகிறான் கூடவே அவரது துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு போகிறான். பாம்பே சென்று புரோட்டா கடையில் வேலைக்கு சேருகிறார் சிம்பு. அங்குள்ள ஊர்க்காரர்களோ பகலில் புரோட்டா கடை இரவில் கொலை என்று வாழ்ந்து வருகின்றனர். இது பிடிக்காத சிம்பு ஊருக்கு தப்பித்து செல்ல நினைக்கிறார். அந்த நேரத்தில் கூட்டாளிகளை எதிர் கோஷ்டி‌ கொலை செய்ய வர அவர்களுடன் சண்டை செய்யும் சிம்பு இறுதியில் தான்‌வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எல்லாரையும் போட்டுத்தள்ளுகிறார். இதன் பிறகு சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே வெந்து தணிந்தது காடு.

முத்து வீரனாக சிலம்பரசன். என்னத்தை சொல்ல இவ்வளவு நடிப்புத் திறமை உள்ள சிம்பு தொடர்ந்து ஒழுங்காக நடித்தாலே போதும். இதுபோன்ற இன்னும் சில படங்கள் நடிக்க வேண்டும். உடலை வருத்திக் கொண்டு நடித்துள்ளார். ஜெயமோகனின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார் கௌதம் மேனன். வழக்கமான டான் கதையாக இருப்பதால் பழைய டான் படங்களின் காட்சிகள் அங்கங்கே வந்து போகின்றன. ஆனால் இத்தகைய படங்களில் இது தவிர்க்க முடியாதது. ஆனாலும் ஒருசில புதுமையான காட்சியமைப்புகள் மூலம் சிம்பு ரசிகர்களுக்கு நல்ல விருந்தை கொடுத்துள்ளார். இரண்டு பாகங்கள் என்று போட்டுவிட்டதால் அதற்காகவே கிளைமாக்ஸில் சில காட்சிகளை இணைத்துள்ளது நெருடுகிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பொறுத்தவரை ஏஆர்.ரகுமான் மிரட்டியுள்ளார். மறக்குமா நெஞ்சம், காலத்துக்கும் நீ வேணும்‌ பாடல்கள் எல்லாம் படம் முடிந்தாலும் காதில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் எதிர்பாராத ஆச்சரியம் மல்லிப்பூ பாடலும் அது பயன்படுத்தப்பட்டுள்ள இடமும். நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் பாடல் இது. மொத்தத்தில் கௌதம் மேனன் தனது பாணியில் இருந்து விலகி சிம்புவுக்கு என்று டான் படம் ஒன்று எடுத்துள்ளார். இயக்குனர்கள் எல்லாம் எழுத்தாளர்களை நம்பி அவர்களது கதைகளை படமாக்கினால் தமிழ் சினிமாவில் இன்னும் ஏராளமான நல்ல படங்கள் வரும் என்பதில் ஐயமில்லை. இரண்டாம் பாகத்திற்கு வெயிட்டிங்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments