அந்தகன் திரை விமர்சனம்!
அந்தகன் திரை விமர்சனம்!
![]()
நீண்ட வருட காததிருப்புக்குப் பின் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகியுள்ளது அந்தகன் திரைப்படம். 90களில் டாப் ஸ்டாராக வலம் வந்த பிரசாந்த் நடிப்பில் படம் வெளியாகி உள்ளதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தின் கதையைப் பற்றி பார்க்கலாம். தன்னை பார்வையற்றவராக காட்டிக்கொள்ளும் நடிகர் பிரசாந்த் பியானோ வாசிப்பதில் ஆர்வம் உடையவர். லண்டன் சென்று இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடுகிறார். அதற்கு பணம் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் ஒரு விபத்தில் பிரியா ஆனந்தை சந்திக்க அவரது பாரிலேயே பியானோ கலைஞராக வேலைக்கு சேர்கிறார். அங்கு வரும் நடிகர் கார்த்திக் தனது திருமண நாளன்று மனைவி சிம்ரனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிரசாந்தை பியானோ வாசிக்க வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு சென்றால் கார்த்திக் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். கண் தெரியாதவராக நடிக்கும் பிரசாந்த் இதனை பார்த்து திடுக்கிடுகிறார். பிரசாந்த் பார்வையற்றவர் என சிம்ரனுக்கு தெரியவர அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார். அதற்கு போலீசாக வரும் அவரது காதலன் சமுத்திரக்கனி உடந்தையாக இருக்கிறார். இறுதியில் பிரசாந்த் தப்பித்தாரா? லண்டன் கனவு என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் தனது அட்டகாசமான நடிப்பை கொடுத்துள்ளார். பார்வையற்றவராக நடிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். நிஜமாக கண் தெரியாத போது ஏற்படும் பதட்டத்தை அசலாக கொண்டுவந்துள்ளார். இது இந்திப் படத்தின் ரீமேக் என்றாலும் அப்படியே தமிழுக்கு ஏற்றபடி சிறப்பாக இயக்கியுள்ளார் தியாகராஜன். ஒரிஜினல் படம் பார்த்தவர்களுக்கு சற்று சுவாரஸ்யம் மிஸ் ஆகும். ஆனால் தமிழில் நடித்த நடிகர்கள் நடிப்பு படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது எனலாம்.

ஊர்வசி, யோகிபாபு, கே எஸ் ரவிக்குமார் கூட்டணியுடன் பிரசாந்த் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் மிக முக்கிய கேரக்டர் சிம்ரன்தான். செமயாக நடித்துள்ளார். அனைவரையும் தனது நடிப்பால் ஓவர்டேக் செய்துள்ளார். நடிகராகவே வரும் கார்த்திக்கின் கதாபாத்திரமும் அவரது பழைய படங்களின் பாடல்கள் வரும் இடமும் நச் ரகம். சமுத்திரக்கனி, வனிதா ஆகியோரும் தங்களது பணியை சிறப்பாக வழங்கியுள்ளனர்.
படம் முழுவதும் இசை வருவதால் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. பாடல்கள் ஓகே ரகம். ரவி யாதவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் எனலாம். சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் நன்று. மொத்தத்தில் சமீபத்தில் வந்த ரீமேக் படங்களில் அந்தகன் தனித்துவமாக வந்து நிற்கிறது. அந்தகன் – வெற்றி. ரேட்டிங் 3.5/5

