தீபாவளி வின்னர் ஆனாரா சிவகார்த்திகேயன்: “பிரின்ஸ்” பட விமர்சனம்!

 

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா உள்ளிட்டோர் நடித்து இந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ள திரைப்படம் “பிரின்ஸ்”. இதுவொரு வித்தியாசமான காமெடி திரைப்படம் என்று சிவகார்த்திகேயன் எல்லா பேட்டியிலும் சிலாகித்து வந்தார். ஆனால் படத்தை பார்த்தால் இது படமா என்ற எண்ணமே ஏற்படுகிறது.

தன்னுடைய வழக்கமான பார்முலாவான காதல், காமெடி வகையிலேயே இந்தப் படத்தையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் இந்த முறை அவரின் முடிவு சரியாக அமைந்துள்ளதா என்று பார்க்கலாம்.

தேசப்பற்று மிக்கவர் சத்யராஜ். சாதி, மதம் எல்லாம் பிடிக்காதவர். ஊர் மக்களையும் அப்படி இருக்க அறிவுறுத்துபவர். இவரது மகன் சிவகார்த்திகேயன் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர். பள்ளியில் புதிதாக சேரும் இங்கிலீஷ் டீச்சர் மரியாவை பார்த்ததும் காதல் வருகிறது. மரியா ஒரு பிரிட்டிஷ் பெண். இவர் தனது அப்பா, பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். வழக்கமான தமிழ் சினிமாவில் வருவதுபோல் சில பல காட்சிகளுக்கு பிறகு இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் அப்பாவின் பூர்வீக நிலத்தை மோசடி செய்து அபகரிக்க நினைக்கிறார் இதையே தொழிலாக கொண்ட பிரேம்ஜி. ஆனால் காதலை ஆதரிக்கும் சத்யராஜே சிவகார்த்திகேயன், மரியாவின் காதலை ஏற்க மறுக்கிறார். அதற்கான காரணம் என்ன? இருவரும் சேர்ந்தார்களா? என்பதே காமெடி கலந்து சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர்.

படத்தின் பெரும் பிரச்சினையாக இருப்பது இதில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் தான். பெரும்பாலான நகைச்சுவை காட்சிகள் அனைவரையும் சென்றடைவது கடினம். அதே போல் காட்சிகளிலும் சுவாரசியம் குறைவு. புதுவிதமான நகைச்சுவை பாணி என்ற பெயரில் ரசிகர்களை சோதிக்கிறார்கள். படத்தின் கதை நடக்கும் இடம் ஏதோ யூடியூப் வீடியோ பார்த்த உணர்வை கொடுக்கிறது. நண்பர்களாக வரும் பிராங்க் ஸ்டார் ராகுல், பரத் இருவரும் கொடுத்த வேலையை செய்துள்ளனர். சத்யராஜ் எப்போதும் போல அதிகமாக நடித்து தள்ளுகிறார். ஆனந்தராஜ் வரும் காவல்நிலைய காட்சி கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. இப்படிப்பட்ட முட்டாள் ஊர்க்காரர்களை எங்கேயும் பார்த்து இருக்க முடியாது. பிடிஓ கூடவா முட்டாளாக இருப்பார். படத்தை கொஞ்சமாவது காப்பாற்றுவது சிவகார்த்திகேயனும் மரியாவும் தான்‌. ஆனாலும் படம் முழுக்க அவர் மட்டுமே பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் கதைத் தேர்வில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பாடல்கள் ஓகே. ஒளிப்பதிவு நன்று. வில்லனாக பிரேம்ஜியின் நடிப்பு பரவாயில்லை. இந்த தீபாவளிக்கு அதிகமான திரைப்படங்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. கூட வெளியான கார்த்தியின் சர்தார் குறைந்த திரையரங்குகளில் தான் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வரும் நாட்களில் இந்த நிலை மாறும். அதற்கு சர்தார் படக்குழு சிவகார்த்திகேயனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted