ரேஸர் திரை விமர்சனம்!
ரேஸர் திரை விமர்சனம்!
![]()
சாட்ஸ் ரெக்ஸ் இயக்கத்தில் அகில் சந்தோஷ், லாவண்யா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ரேஸர். பைக் ரேஸை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
நாயகன் அகிலுக்கு சிறு வயதில் இருந்தே மிகப் பெரிய பைக் ரேஸர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் அவரது அப்பாவோ மறுப்பு தெரிவிக்கிறார். வளர்ந்த பிறகு அப்பாவுக்கு தெரியாமல் ரேஸ் பைக் வாங்கி போட்டியில் பங்கேற்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இறுதியில் பைக் ரேஸில் வெற்றி பெற்றாரா? அப்பாவுக்கு தெரிந்ததா என்பதே ரேஸர் திரைப்படம்.
ஹீரோ அகில் நன்றாக நடித்துள்ளார். அவரது நண்பர்களாக வருபவர்கள் மற்றும் கோச் எல்லோருமே நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். அப்பாவாக நடித்துள்ளவரும் யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார். நாயகி லாவண்யா சின்னத்திரையில் நமக்கு பரிச்சயமான முகமாக இருப்பவர். ஆனால் அதற்கு முன்பே இதில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். காதலிக்கு என்ன இருக்குமோ அதே வேலைதான் இவருக்கும் இப்படத்தில். சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் பைக் ரேஸ் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. இயக்குனர் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியுள்ளார். பிரபாகரின் கேமரா இரவு நேரங்களில் ரேஸ் காட்சிகளை தத்ரூபமாக காட்டியுள்ளது.

இவ்வளவு சிறிய முதலீட்டில் இதுபோன்று எடுப்பது கடினம். நன்று. பரத்தின் பின்னணி இசை ஓகே. பாடல்கள் பரவாயில்லை.
மொத்தத்தில் இவ்வளவு சிறிய படக்குழுவினரை வைத்துக் கொண்டு முடிந்த வரை நல்ல படம் கொடுக்க முயன்றுள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

