பார்க்கிங் திரைப்பட விமர்சனம்!
பார்க்கிங் திரைப்பட விமர்சனம்!
![]()
தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில நல்ல படங்கள் வரும். மலையாளத்தில் எடுக்கப்படுவது போல இங்கேயும் குறிப்பிட்ட படங்கள் வெளிவருவது உண்டு. சாதாரண கதையை இப்படியும் நடக்குமா என்ற கோணத்தில் நல்லதொரு திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருப்பார்கள். அதுவும் பெரும்பாலும் புதுமுக இயக்குனர்தான் இப்படி நம்மை ரசிக்க வைத்திருப்பார். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் பார்க்கிங் திரைப்படம் உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். இது எல்லாம் ஒரு பிரச்சினையா என்று கேட்க வைக்கும் ஒரு சாதாரண கார் பார்க்கிங் பிரச்சினையை இரண்டு நபர்களின் ஈகோ மூலம் அட்டகாசமான திரைப்படமாக கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
அய்யப்பனும் கோஷியும், டிரைவிங் லைசென்ஸ் படங்களை போல இரண்டு நபர்களுக்கு இடையிலான ஈகோ மோதலை மிகவும் சுவாரசியமான திரைக்கதை மூலம் சொல்லியுள்ளார்.
படத்தின் கதைப்படி நாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இருவரும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஹரிஷ் கல்யாண் ஐ.டி.கம்பெனியில் வேலை செய்கிறார். மனைவி கர்ப்பமாக இருக்கிறார். புதிதாக ஒரு வீட்டிற்கு குடி வருகின்றனர். மாடி வீட்டில் குடி வரும் இவர்களுக்கு கீழ் வீட்டில் பத்து வருடங்களுக்காக வாடகைக்கு இருக்கிறார் அரசு ஊழியரான எம்எஸ் பாஸ்கர். தனது மனைவி கர்ப்பமாக இருப்பதால் ஒரு புதுகார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். இதனால் கீழ் வீட்டில் உள்ள எம்எஸ் பாஸ்கருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இது முற்றி கைகலப்பாகிறது. கோவத்தில் எம்எஸ் பாஸ்கரை அடித்து விடுகிறார் ஹரிஷ் கல்யாண். இதனால் ஈகோவின் உச்சத்திற்கு செல்லும் எம்எஸ் பாஸ்கர் எடுக்கும் முடிவுகளும் அதற்கு ஹரிஷ் கல்யாண் செய்யும் எதிர்வினைகள்தான் படம். இறுதியில் என்ன ஆனது என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஹரிஷ் கல்யாண் ஆரம்பத்தில் அன்பான கணவராக வந்தாலும் எம்எஸ் பாஸ்கர் உடனான சண்டைக்கு பிறகு அவருக்குள் இருக்கும் டெவில் எட்டிப் பார்க்கும் போது தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார். எம்எஸ் பாஸ்கருக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார். எம்எஸ் பாஸ்கருக்கு பொருத்தமான கதாபாத்திரம் மனிதர் அதிகப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் நல்லவராக இருந்தாலும் ஹரிஷ் கல்யாண் கார் வாங்கியவுடன் அவர் காட்டும் ரியாக்ஷன்கள் தரம். ஈகோ ஒருவனை எந்த எல்லை வரை கொண்டு செல்லும் என்பதை எம்எஸ் பாஸ்கர் கதாபாத்திரம் உதாரணம். அவர் செய்யும் செயல்கள் ஆத்திரம் வரவைக்கின்றன. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்துஜா காதல் மனைவியாக , கர்ப்பிணியாக இயல்பாக நடித்துள்ளார். எம்எஸ் பாஸ்கர் மனைவியாக நடித்த ரமா, மகளாக நடித்த பிரார்த்தனா, இளவரசு என அனைவரும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் வலு சேர்த்துள்ளார். ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு நன்று. பிலோமின் ராஜின் எடிட்டிங் கச்சிதம். முதல் பாதி ரொம்பவும் ரசிக்க வைத்துள்ளது. இரண்டாம் பாதியில் ஒருசில காட்சிகள் சினிமாத்தனமாக இருக்கிறது. இப்படியும் செய்வார்களா என்று கேட்க வைக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இரண்டாம் பாதி முழுவதும் ரசிக்க வைத்திருக்கும். கிளைமாக்ஸ் சூப்பர். மொத்தத்தில் நம்ம ஆட்களும் மலையாள படங்களுக்கு சவால் விடும் படைப்புகளை எடுத்து வருகிறார்கள் என்பது ஆரோக்கியமான விஷயம். ரேட்டிங் 4/5. பார்க்கிங் – தடையில்லை.

