குறட்டை படுத்தும் பாடு – “குட் நைட்” திரை விமர்சனம்!

குறட்டை படுத்தும் பாடு – “குட் நைட்” திரை விமர்சனம்!

மலையாள சினிமாவில் சாதாரண விஷயத்தை கூட கதைக்கருவாக்கி அருமையான திரைப்படமாக உருவாக்கிவிடுவார்கள். தமிழில் இதுபோன்ற படங்கள் எல்லாம் வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குட்நைட் திரைப்படம். நம்மில் பலரும் அனுபவித்து வரும் ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு இயல்பான காமெடி கலந்து ஒரு நல்ல படைப்பாக வந்துள்ளது இப்படம். தற்போது இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம்.

நாயகன் மணிகண்டன் அம்மா, அக்கா, தங்கை, மச்சான் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மிடில் கிளாஸ் குடும்பம்தான் என்றாலும் சந்தோஷம் குறைவில்லாத குடும்பம். ஐடியில் வேலை செய்கிறார். ஆனால் இவருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை குறட்டை. தூங்கும் போது இவர் விடும் குறட்டையால் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல பக்கத்து வீட்டுகாரர்கள், அலுவலகம் என கிண்டலுக்குள்ளாகிறார். காதலும் கைகூடாமல் இருக்கிறது. ஒருகட்டத்தில் அப்பா, அம்மா இல்லாத மீத்தாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அதன்பின் இவரது குறட்டை இவர்களது திருமண வாழ்வில் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இறுதியில் குறட்டை பிரச்சினையில் இருந்து நாயகன் விடுபட்டாரா? குறட்டையால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்ததா? என்பதை காமெடி கலந்து அனைவரும் ரசிக்கும் படி கொடுத்துள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகர்.

சாதாரண கதையைக்கு அட்டகாசமான திரைக்கதை அமைத்து நம்மை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார் இயக்குனர். நாயகனாக ஜெய்பீம் மணிகண்டன் அட்டகாசமான நடிப்பு. காமெடியில் அதகளம் செய்துள்ளார். முதல்பாதியில் இவரும் ரமேஷ் திலக்கும் அடிக்கும் லூட்டியில் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாவது நிச்சயம். தனது குறட்டை பிரச்சனையை குடும்பமும் சுற்றமும் கிண்டல் செய்யும் போது ஒருகட்டத்தில் ஆமா நான் குறட்டை விடுவேன் உங்களுக்கு பிரச்சனைனா காத பொத்திக்கிட்டு‌ போங்க என பொங்கி எழும் இடத்தில் பரிதாபம் வரவைக்கிறார். தன் குறட்டை மனைவியை தொல்லை செய்யக்கூடாது என்பதற்காக தனி அறையில் சென்று தூங்குவது , குறட்டையை நிப்பாட்ட செய்யும் அலப்பறைகள் என காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறார். ரமேஷ் திலக் நாயகனின் மச்சானாக சிரிக்கவும் அழவும் வைத்துள்ளார். இயல்பான நகைச்சுவையால் கலகலப்பாக படத்தை கொண்டு சென்றுள்ளார். ரமேஷ் திலக் மனைவியாக ரேச்சல், கடைசி விவசாயி படத்தில் நீதிபதியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர் இதில் அக்காவாக நன்றாக நடித்துள்ளார். இவருக்கும் ரமேஷ் திலக்குமான கெமிஸ்ட்ரி அருமையாக உள்ளது.

நாயகியாக மீத்தா ரகுநாத். அப்பாவியான தோற்றத்தில் பரிதாபம் வரவைக்கிறார். அப்பா, அம்மா இல்லாததால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டு அன்புக்காக ஏங்கும் பாத்திரத்தில் பிரமாதமாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவரின் குறட்டையால் அவதிப்படும் இடங்களில் பாவப்பட்ட பெண்ணாக மனதை அள்ளுகிறார். பாலாஜி சக்திவேல் மற்றும் அவரது மனைவியான நடித்தவர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். சென்ட்டிமெண்ட் காட்சிகள் நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளன. இதுவே இப்படத்தின் வெற்றி. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை நன்றாக உள்ளது. ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்‌. பரத் விக்ரமன் எடிட்டிங் நன்று.

கிளைமாக்ஸ் யூடர்ன் காட்சிகள் சிரப்பலை. இப்படி படத்தில் வரும் பல காட்சிகள் சிரிப்புக்கு உத்திரவாதம் அளிக்கின்றன. ஒரு சாதாரண கதையை எடுத்துக் கொண்டு அதில் காமெடி, குடும்ப சென்ட்டிமென்ட் ஆகியவற்றை கலந்து அருமையான திரைக்கதை மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளனர். லவ் டுடே, திருச்சிற்றம்பலம், டாடா வரிசையில் இணைந்துள்ள குட் நைட் திரைப்படத்தை நிச்சயம் ஒருமுறை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments