சாய் பல்லவி நடித்துள்ள “கார்கி” பட விமர்சனம்!

 

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்து சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘கார்கி’ படத்தின் திரை விமர்சனம்.

 

பள்ளி ஆசிரியையான சாய் பல்லவி தனது அப்பா ஆர்.எஸ்.சிவாஜி, அம்மா மற்றும் தங்கையுடன் சென்னையில் வசித்து வருகிறார். அவரது அப்பா அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மெனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் வேலை பார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது வயது சிறுமியை அங்கு வேலை பார்க்கும் நான்கு வடமாநில இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிடுகின்றனர். அவர்களை கைது செய்த காவல்துறை ஐந்தாவது குற்றவாளியாக சாய் பல்லவியின் தந்தையையும் கைது செய்கிறது. இதனால் சாய்பல்லவி குடும்பம் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறது. சட்ட போராட்டங்களின் மூலம் தனது அப்பாவை மகள் காப்பாற்றினாரா?இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே கார்கி படத்தின் கதை.

சாய் பல்லவி எந்தவித பெரிய மேக்கப்பும் இல்லாமல், மிகவும் எளிமையாக படம் முழுக்க நமது பக்கத்து வீட்டு பெண் போலவே காட்சியளிக்கிறார். சாய்பல்லவியின் எதார்த்தமான நடிப்பும், அழுத்தமான திரைக்கதையும் படத்தின் வெற்றிக்கு வலு சேர்க்கிறது. சாய் பல்லவிக்கு நிச்சயம் விருது காத்துக்கொண்டு இருக்கிறது. வழக்கறிஞராக வரும் காளி வெங்கட்டுக்கு பெயர் சொல்லும் படமாக இப்படம் அமைந்துள்ளது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளார். படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களான ஆர் எஸ் சிவாஜி,சரவணன், ஜெயபிரகாஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர். அப்பாவை காப்பாற்ற சட்டத்தின் வாயிலாக போராடும் ஒரு மகளின் கதையை தத்ரூபமாக எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் நேர்த்தியாக கொடுத்துள்ளார் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்.

 

திருநங்கைகள் நீதிபதியாக வந்தாலும் அவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது. ஒருவர் தவறுதலாக ஒரு பெரிய வழக்கில் கைதாகும் பொழுது அவரும் அவரது குடும்பத்தினம் என்ன விதமான இன்னல்கள் சந்திக்கின்றனர். அவர்களை இன்றைய மீடியா எவ்வாறு சித்தரிக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக படத்தில் பதிவு செய்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பலவிதமான விவாதங்களை இந்தப்படம் நிச்சயமாக எழுப்பும். பெண்கள் குறிப்பாக குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளின் எதிரொலியாக ‘கார்கி’ படம் அமைந்துள்ளது. மொத்தத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம் ‘கார்கி’.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments