பர்த்மார்க் திரைப்பட விமர்சனம்!
பர்த்மார்க் திரைப்பட விமர்சனம்!
![]()
விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர், மிர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பர்த்மார்க். இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுப்பது பற்றிய விழிப்புணர்வு படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் ஷபீர் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர். கார்கில் போரில் பங்கேற்று நாட்டுக்காக பல இன்னல்களை அனுபவித்தவர். அவரது மனைவி மிர்ணா கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதால் அதற்காக தனியார் இயற்கை மருத்துவ கிராமத்திற்கு மனைவியை அழைத்து வருகிறார். போரில் இருந்து வந்ததால் ஷபீருக்கு மன அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பிறக்கப் போகும் குழந்தை தனது இல்லை என்று மனைவியை சந்தேகப்பட்டு குழந்தை பிறந்ததும் கொலை செய்ய நினைக்கிறார். இறுதியில் குழந்தை நல்ல முறையில் பிறந்ததா? மிர்ணாவுக்கு ஷபீரின் திட்டம் தெரிந்ததா? இறுதியில் என்ன ஆனது என்பதே பர்த்மார்க்.
ஒரு ராணுவ வீரரின் வீர தீர செயல்களை படத்தில் காட்டிவிடலாம் ஆனால் போரில் அவர் பட்ட வலிகளையும் சித்ரவதைகயும் அவரது மன அதிர்ச்சியையும் காட்டுவது சவாலான ஒன்று. அதனை ஷபீர் அற்புதமாக தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார். கோபம், சந்தேகம், துக்கம், அழுகை, ஏமாற்றம் என அத்தனை உணர்ச்சிகளையும் சர்வசாதாரணமாக வெளிப்படுத்துகிறார். மிர்ணா கர்ப்பிணி பெண்ணாக நன்றாக நடித்துள்ளார். கணவனின் செயல் கண்டு வருந்துவது, உண்மை தெரிந்து அவர் எடுக்கும் முடிவு இறுதியில் குழந்தையை பெற்றெடுக்க படும் பாடு என சிறப்பாக செய்துள்ளார். ஒருசில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு முழு படத்தையும் ஓரளவுக்கு சமாளித்துள்ளார்.

ஒரு சில விஷயங்களை பார்வையாளர் முடிவுக்கே விட்டுவிடும் இயக்குனரின் பார்வை நன்று. முதல் பாதியில் என்ன நடக்கிறது இது எது மாதிரியான படம் என யோசிக்க வைத்த இயக்குனர் இரண்டாம் பாதியில் அதற்கான விடை தெரியும் போது அட இதுக்குத் தான் இத்தனை பிரச்சினையா என கேள்வி எழுகிறது. உதய் தங்கவேல் ஒளிப்பதிவு படத்தின் சூழலுக்கு ஏற்ப குளிர்ச்சியாக உள்ளது. விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசையில் ரசிக்க வைக்கிறார்.
இயற்கை முறை பிரசவம் பற்றி பேசியுள்ள இயக்குனர் இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் சூப்பரான படமாக வந்திருக்கும். மொத்தத்தில் பர்த்மார்க் – ஓகே. ரேட்டிங் 3/5.

