எப்படி இருக்கிறது ஜெயம் ரவியின் “இறைவன்” – திரை விமர்சனம்!
எப்படி இருக்கிறது ஜெயம் ரவியின் “இறைவன்” – திரை விமர்சனம்!
![]()
இயக்குனர் அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள இறைவன் படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம்.. சமீப காலமாக தமிழ் சினிமா சைக்கோ கில்லர் படங்கள் அதிகமாக வந்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள படம் இறைவன். படத்தின் கதையை பற்றி பார்க்கலாம்.
ஜெயம் ரவியும் நரேனும் நண்பர்கள் இருவரும் போலீசாக இருக்கிறார்கள். நரேன் மனைவி விஜயலட்சுமி குழந்தை மற்றும் தங்கை நயன்தாராவுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இளம்பெண்கள் அங்கங்கு வீசப்பட்டுள்ளனர். இதனை ஜெயம் ரவி மற்றும் நரேன் குழுவினர் விசாரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த தேடுதல் வேட்டையில் நரேன் கொல்லப்பட கொலையாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். நண்பனின் பிரிவால் போலீஸ் வேலை வேண்டாம் என்று ஜெயம் ரவி சென்றுவிடுகிறார்.இந்த நிலையில் சிறையில் இருந்து தப்பிக்கும் கொலையாளி ஜெயம் ரவியின் மற்றொரு நண்பரின் மகளை கடத்தி விடுகிறார். இதனால் அன் அபீஷியலாக குற்றவாளியை தேடுகிறார் ஜெயம் ரவி. அப்படி தேடும் போது அவருக்கு வேறு ஒரு திடுக்கிடும் தகவல் கிடைக்கிறது. அது என்ன தகவல்? உண்மை குற்றவாளி யார்? இறுதியில் என்ன ஆனது என்பதே இறைவன் படத்தின் கதை.

ஜெயம் ரவி இப்படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னர் நடித்த படங்களில் முக பாவனைகளையே இதிலும் பின்பற்றியுள்ளார். சைக்கோ கொலைகாரன் என்பதற்காக கொடூரமாக கொலை செய்வது போல் காட்டுவது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைக்கிறது. அடுத்தடுத்து கொலைகள் என ஒவ்வொரு காட்சியும் பிணக்குவியல் நிறைந்து கிடக்கிறது. நரேன் சிறிது நேரமே வந்தாலும் நன்றாக நடித்துள்ளார். சைக்கோ கொலையாளி ராகுல் போஸ் கண்களாலேயே மிரட்டுகிறார். இடைவேளைக்குப் பிறகு வரும் மற்றொரு கொலையாளியான வினோத் நன்றாக நடித்திருந்தாலும் சைக்கோ என்ற பெயரில் கத்துக்கொண்டே இருக்கிறார் இதனால் போகப் போக கடுப்பு ஏற்படுகிறது. நயன்தாரா இப்படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்று தெரியவில்லை. விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், ஆஷிஷ் வித்யார்த்தி, பக்ஸ் அனைவரும் வந்து போகிறார்கள். யுவன் சங்கர் ராஜா எவ்வளவு முயன்றும் படத்தை காப்பாற்ற முடியவில்லை. பாடல்கள் வேகத்தடை. எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் கடமைக்கு ஒரு சைக்கோ த்ரில்லர் கதையை எடுத்துவைத்துள்ளனர்.
இரண்டாம் பாதி முழுவதும் தேவையில்லாத ஆணியாக பொறுமையை சோதிக்கிறது. மொத்தத்தில் இறைவன் – பகைவன். ரேட்டிங் 2/5

