எப்படி இருக்கிறது இராவண கோட்டம் – திரை விமர்சனம்!

எப்படி இருக்கிறது இராவண கோட்டம் – திரை விமர்சனம்!

மதயானை கூட்டம் என்ற படத்தின்‌ மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள அடுத்த படம் இராவண கோட்டம். இப்படத்தில் சாந்தனு, பிரபு, கமல் ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம்.

வறண்ட பூமியான ராமநாதபுரத்தில் மேலத்தெரு , கீழத்தெரு என இரண்டு சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் ஊர் தலைவர்‌ பிரபு. சாதி, மதம் கடந்து எல்லோரையும் ஒரே சமமாக பார்த்து வருபவர். எந்த கட்சிக் கொடியும் ஊருக்குள் வரக்கூடாது என்று நினைப்பவர். இது எம்எல்ஏ, அருள்தாஸ் மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர் தேனப்பன் ஆகியோருக்கு இடையூராக இருக்கிறது. எப்படியாவது இரண்டு சமுதாயத்தினரையும் பிரித்து ஊருக்குள் கலவரம் வெடிக்க திட்டம் தீட்டுகின்றனர். இந்த சதி திட்டத்தில் நண்பர்களான மேலத்தெருவை சேர்ந்த சாந்தனு, கீழத்தெருவை சேர்ந்த சஞ்சய் இருவரும் சிக்கிக் கொள்கின்றனர். இறுதியில் இவர்களின் சதித் திட்டம் பலித்ததா? நண்பர்கள் என்ன ஆனார்கள்? என்பதே இராவண கோட்டம்.

இந்தமுறையும் சாதி, அரசியல், என வந்துள்ளார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் வர காரணமான சீமக் கருவேல மரங்களும் அது எப்படி அங்கு வந்தது என்ற அரசியலை பேசி அதன் மூலம் ஒரு கதையை சொல்லியுள்ளார். தண்ணீர் வளத்தை முழுவதும் சீமக் கருவேல மரங்கள் உறிஞ்சி ஊரையே வறண்ட பூமியாக மாற்றியுள்ளன. கீழத்தெரு, மேலத்தெரு மக்கள் ஒற்றுமையாக இருக்கும் போது அதனை எப்படியாவது பிரித்து தனது வேலையை நடத்திவிட வேண்டும் என்று அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சிதான் படம். சாந்தனு நீண்ட காலமாகவே ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார். இதனால் தன்னை முழுவதுமாக இயக்குனர் இடம் ஒப்படைத்து விட்டார். முடிந்தவரை சிறப்பான நடிப்பையும் வழங்கியுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் கடின உழைப்பை கொடுத்துள்ளார். நிச்சயம் இது அவருக்கு கம்பேக் படம்தான். ஒத்தக்கை உடன் வருபவரின் நடிப்பு அசுரத்தனம். ஊர் மக்களை பிரிக்க முடியாததால் இரண்டு நண்பர்களுக்குள் பகையை வளர்க்க காதல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து வெற்றி பெறுகிறார். சூழ்ச்சி மூலம் நண்பர்களுக்குள் பகையை வளர்த்து அதன் மூலம் குளிர் காயும் வேடத்தில் அசத்தியுள்ளார். ஆனந்தி பகடைக்காயாக பயன்பட்டுள்ளார். மூவரை வைத்து திரைக்கதையில் பரமபதம் ஆடியுள்ளார் இயக்குனர். அது திரையில் நன்றாக செயல்பட்டுள்ளது. பிரபு, இளவரசு ஆகியோரின் அனுபவமிக்க நடிப்பு படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அரசியல் வாதிகளின் சுயநலம் எப்படி ஒரு ஊரையும் அந்த மக்களையும் பாதிக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளார். சாதிக் கலவரங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் எது என்பதையும் கண்முன் காட்டியுள்ளார். கருவேல மரங்கள் கூட தமிழ்நாட்டில் ஒரு அரசியல் பொருளாக இருப்பது என்பது தெரியவரும் போது படம் பார்ப்பவர்களை உலுக்குகிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களைவிட பின்னணி படத்தின் அழுத்தத்தை கூட்டியுள்ளது. வெற்றிவேலின் கேமரா வறண்ட ராமநாதபுர பூமியை அப்படியே படம்பிடித்துள்ளது. மொத்தத்தில் இராவண கோட்டம் வெற்றிக்கூட்டம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments