ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த வார இறக்குமதி – “ஃபர்ஹானா” திரை விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த வார இறக்குமதி – “ஃபர்ஹானா” திரை விமர்சனம்!

வாரா வாரம் வெள்ளிக்கிழமை வருகிறதோ இல்லையோ ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் ரிலீஸ் ஆகிவிடுகிறது. அந்த வரிசையில் இந்த வார ரிலீஸ் ஃபர்ஹானா படத்தை பற்றி பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டுப்பாடுமிக்க இஸ்லாமிய குடும்பத்து பெண். கணவர் ஜித்தன் ரமேஷ் செருப்பு கடை வைத்துள்ளார். மூன்று குழந்தைகள். குடும்ப கஷ்டம் காரணமாக வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். கால் செர்டர் வேலைக்கு செல்லும் அவர் அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக நட்புலகம் என்னும் செக்ஸ் சாட் பிரிவுக்கு செல்கிறார். அங்கு போனில் பேசும் ஆண்கள் அசிங்கமான வார்த்தைகள் பேசுவதால் இவருக்கு இந்த வேலை பிடிக்காமல் மாறிவிடலாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆனால் குழந்தைகளின் படிப்புக்காக வேறு வழியின்றி அந்த வேலையை செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு ஒரு போன் வருகிறது. மறுபுறம் பேசுபவர் பர்ஹானாவை புரிந்து கொள்ளும் வகையில் நட்பாக பேசுகிறார். பர்ஹானாவுக்கும் அவரை பிடிக்க அந்த உரையாடல் தொடர்கிறது. தனது வாழ்க்கை மாறிவிட்டது என நினைக்கும் போது ஒரு பெரிய பிரச்சனையில் பர்ஹானா சிக்கிக்கொள்கிறார். அந்த பிரச்சனையில் இருந்து பர்ஹானா எப்படி மீள்கிறார் என்பதே மீதிக் கதை.

பர்ஹானா என்ற கதாபாத்திரத்தில் இஸ்லாமிய பெண்ணாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இஸ்லாமிய பெண்ணாகவே வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். காட்சிக்கு காட்சி அவரது நடிப்பு அசர வைக்கிறது. அம்மாவாக, மனைவியாக, சாதாரண பெண்ணாக ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக தடம் மாறும் போது ஏற்படும் குற்ற உணர்ச்சியை முகத்தில் காட்டுவதாகட்டும், கணவனிடமும் குடும்பத்திடமும் பயந்து நடுங்குவதாகட்டும் பிண்ணி எடுத்துள்ளார்.

சாதுவான கணவராக ஜித்தன் ரமேஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். எந்த ஒரு அலட்டலும் இல்லாத எளிமையான இஸ்லாமிய கணவராக நடித்துள்ளார். குறிப்பாக மனைவி தடம் மாறுவதை தெரிந்த பிறகும் அவருக்கு எடுத்து சொல்லும் காட்சிகளில் நம்மை உணர்ச்சி வயப்பட்ட வைக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு வேடத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா தத்தா மற்றும் அனு மோல் இருவரும் தங்களுக்கு கொடுத்த காதப்பாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர்.

இந்த படத்தில் செல்வ ராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற படங்களை விட இந்த படத்தில் அவரது நடிப்பு நன்றாக உள்ளது.‌ அதற்கு இயக்குனருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பர்ஹானா படமும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என நினைத்த நிலையில்
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ஒரு புதுமையான கதைக் களத்தினை தேர்வு செய்து மிக திறம்பட கையாண்டுள்ளார். குறிப்பாக திரைக்கதையை நகர்த்தி சென்ற விதம் நம்மை சீட்டின் நுனிக்கே நகர்த்தி செல்கிறார். மிகவும் சிக்கலான கதையை நல்ல திரைக்கதை மூலம் நெருடல் இல்லாமல் கொடுத்துள்ளார்.

ஆனால் ஒரு இஸ்லாமிய பெண்ணை இதுபோன்ற கதாபாத்திரமாக சித்தரிக்க வேண்டுமா என்ற சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் ஒரு நல்ல திரைப்படத்தை இயக்குனர் கொடுத்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை நம்மை அடுத்து என்ன என்ற படபடப்பில் ஆழ்த்தியுள்ளது. வசனங்கள் ஆங்காங்கே கைதட்ட வைக்கின்றன. மொத்தத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார் இந்த ஃபர்ஹானா.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments