எப்படி இருக்கிறது உதயநிதி நடித்த “கண்ணை நம்பாதே” – திரை விமர்சனம்!
எப்படி இருக்கிறது உதயநிதி நடித்த “கண்ணை நம்பாதே” – திரை விமர்சனம்!
![]()
நடிகரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தை இயக்கிய மு.மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் உதயநிதியுடன் ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்படி இருக்கிறது கண்ணை நம்பாதே.
உதயநிதி ஸ்டாலின் நாயகி ஆத்மிகாவை காதலித்து வருகிறார். நாயகியின் வீட்டிலேயே நாயகன் வாடகைக்கு இருக்கிறார். இவர்களது காதல் நாயகியின் அப்பாவுக்கு தெரியவர உதயநிதியை வீட்டை காலி செய்யச் சொல்கிறார். வீடு தேடி அலையும் உதயநிதி, பிரசன்னா தங்கியிருக்கும் வீட்டில் தங்குகிறார். ஒருநாள் இருவரும் வெளியே செல்ல அங்கு வரும் பூமிகாவின் கார் விபத்துக்கள்ளாகிறது. இதை பார்த்த உதயநிதியிடம் என்னை எனது வீட்டில் விட்டுவிடுமாறு பூமிகா சொல்கிறார். இவரும் வீட்டில் ட்ராப் செய்கிறார். மழையாக இருப்பதால் தனது காரை எடுத்துச் சென்று காலையில் வந்து கொடுக்குமாறு உதயநிதியிடம் பூமிகா சொல்கிறார். இந்த நிலையில் காலையில் உதயநிதி வந்து பார்க்கும் போது பூமிகாவின் சடலம் கார் பின்னாடி பக்கத்தில் கிடக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியாகும் உதயநிதி, பிரசன்னாவிடம் உதவி கேட்கிறார். அதன் பின் ஏராளமான பிரச்சினைகளில் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். இறுதியில் பிரச்சினையில் இருந்து இருவரும் தப்பித்தார்களா? பூமிகா யார்? பூமிகாவை கொன்றது யார்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது கண்ணை நம்பாதே.

உதயநிதி படம் முழுவதும் இறுக்கமான முகத்துடனேயே வருகிறார். செய்யாத கொலைப்பழியில் சிக்கிக் கொண்ட நபராக நன்றாக நடித்துள்ளார். சாதாரண நபராக இருக்கும் அவர் இறுதியில் ஆக்ஷனின் ஈடுபடுவது நெருடல். படத்துக்கு படம் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது. இவருக்கும் ஆத்மிகாவுக்குமான காதல் காட்சிகள் குறைவுதான். சதீஷ் நண்பராக சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். பிரசன்னா படம் முழுவதும் உதயநிதியுடன் வருகிறார். இவர் சொல்வதை எல்லாம் கேட்டு உதயநிதி பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார். சுபிக்ஷா, வசுந்தரா இருவரும் கதையின் ஓட்டத்துக்கு பயன்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பரபரப்பு குறையாமல் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். முதல் பாதி நன்றாகவே இருக்கிறது. இரண்டாம் பாதியில் அதீத சினிமாத்தனம் மற்றும் லாஜிக் மிஸ்டேக் இடிக்கிறது. சித்து குமாரின் பின்னணி இசை த்ரில்லர் படத்துக்கான மதிப்பை கூட்டியுள்ளது. ஜலந்தர் வாசனின் கேமரா இரவு நேரத்தில் அதிகம் உழைத்துள்ளது. மொத்தத்தில் நல்ல நாவல் பார்ப்பது போல் துவங்கிய முதல் பாதி இரண்டாவது பாதி வந்ததும் வழக்கமான சினிமாவாக முடிந்துவிட்டது.

