நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம்; “கட்டா குஸ்தி” விமர்சனம்!

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த வார ரிலீஸில் மிக சிறந்த பொழுதுபோக்கு படமாக வந்துள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் ஜஸ்டின் இசையில் வெளிவந்து இருக்கும் படம் .
தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருக்கும் கணவன் மனைவி சண்டைதான் படம். ஆனால் இந்த கட்டா குஸ்தி கணவன் மனைவிக்குள் நடக்கும் மல்யுத்ததை தான் மிகவும் கலகலவென சிரிக்கும் படி கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

பொள்ளாச்சியில் மைனர் போல சுற்றி திரியும் ஹீரோ விஷ்ணு விஷால் மாமாவாக வரும் கருணாஸ் இவர் தான் கதையின் பலம் மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்க்கும் மாமா கருணாஸ் மாப்பிள்ளையின் விதிகளுக்கு பொண்ணு கிடைக்கவில்லை இந்த சூழ்நிலையில் கேரளாவில் மல்யுத்த வீராங்கனை ஐஷ்வர்யா லக்ஷ்மி விஷ்ணு விஷால் போடும் அத்தனை விதிகளுக்கும் பொருத்தம் இல்லாத பெண் இவர்களுக்கு ஆகும் திருமணம் இந்த திருமணத்தால் ஏற்படும் பிரச்சினைகளை மிகவும் அழகாக இரண்டாம் பகுதியில் உணர்ச்சி பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
முதல் பகுதி பெண் தேடும் படலமும் சரி ஐஷ்வர்யா லக்ஷ்மி மல்யுத்த போட்டி காட்சிகளும் குறிப்பாக கல்யாணம் ஆகி முதல் இரவு காட்சியும் சரி நம்மை வயிறு வலிக்குற அளவுக்கு சிரிக்க வைக்கிறார் இயக்குனர். இயக்குனருக்கு துணையாக படத்தில் அனைவரும் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். முதல் பகுதி கலகலப்பாக நகர்கிறது. கணவர்களை பற்றி பக்கத்து வீட்டு பெண்கள் ஐஸ்வர்யா லட்சுமியிடம் கூறும் காட்சியும் மனைவிகளை பற்றி கருணாஸ் கூறும் காட்சியும் நிச்சயம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும்.

படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக வளம் வந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதுவே இந்த படத்தின் மிக பெரிய வெற்றி என்று சொல்லலாம். நாயகிக்கு எங்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உணர்ந்து நடித்து இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
படத்தின் மிகப் பெரிய பலமே ஐஸ்வர்யா லட்சுமி தான். கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் நம்மை மிரட்டுகிறார்.அதிலும் மல்யுத்த காட்சிகளில் மிகவும் பயிற்சி வாய்ந்த ஒரு குஸ்தி வீரர் போல சண்டை காட்சிகளில் மிளிர்கிறார். இவரின் ஆவேச நடிப்பும் சண்டைக் காட்சிகளும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு விஜயசாந்தியை பார்ப்பது போன்ற உணர்வு.
கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் டைமிங் காமெடி ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு அழகாக உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது. அதனை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். பின்னணி இசையில் தனது பணியை சரியாக செய்துள்ளார்.
கிளைமாக்ஸ் காட்சி எதிர்பார்த்தபடி இருந்தாலும் ஒரு சாதாரண கதையை எடுக்கொண்டு அதனை அழகான திரைக்கதை மூலம் பெண்கள் ஆண்களுக்கு அடிமையில்லை என்ற முக்கியமான கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இப்படம் வெளியாகியுள்ளது. நிச்சயம் திரையரங்குகளில் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

