சந்தானம் நடித்த ஏஜென்ட் கண்ணாயிரம் திரை விமர்சனம்!
![]()
மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம். இப்படம் தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக் ஆகும். கதைப்படி சிறுவயதில் தனது அம்மாவுடன் வளரும் சந்தானம் சிறு சிறு விஷயங்களையும் நுணுக்கமாக துப்பறியும் திறமை படைத்தவர். அவர் வளர்ந்த பிறகு கோவையில் தனியார் டிடெக்டிவ் ஆகிறார். அப்போது அவரது அம்மா இறந்துவிடுகிறார். இதனால் சொத்து பிரச்சினை ஏற்பட சூலூரில் சென்று சில நாட்கள் தங்குகிறார். அங்கு டாக்குமெண்டரி படம் எடுக்கும் நாயகி ரியா சுமன் அறிமுகமாகிறார். அப்போது அந்த ஊரில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ அதனை கண்டுபிடிக்க நினைக்கிறார் சந்தானம் . ரியா சுமன் அவருக்கு உதவியாக இருக்கிறார். இறுதியில் இந்த மரணங்களுக்கு காரணம் என்ன என்பதை சந்தானம் கண்டுபிடித்தாரா என்பதே கதை.

தெலுங்கில் வெற்றிபெற்ற ஒரு படத்தை எடுத்து தமிழில் சந்தானத்தை வைத்து சம்பவம் செய்துள்ளனர். ஏற்கனவே குலுகுலு என்ற காவியத்தை கொடுத்த சந்தானம் சற்றும் மனம் தளராமல் இந்த படத்தையும் கொடுத்துள்ளார். இது எந்தவகையான படம் என்றே தெரியவில்லை. டார்க் காமெடி படமாகவும் சென்டிமென்ட் படமாகவும் இன்றி தத்தளிக்கிறது. அங்கங்கே சில காமெடிகளில் சந்தானம் டச் இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு சீரியஸாக சென்றாலும் படம் பார்ப்பவர்கள் என்னடா என்று உட்கார்ந்துள்ளனர். இப்படத்தை பலபேர் தெலுங்கில் பார்த்துவிட்டதால் தமிழில் எடுபடவில்லை. யுவன் சங்கர் ராஜா தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார். புதுமையான கேமரா ஒர்க்கும் நன்றாக உள்ளது. சந்தானம் இனியாவது சுதாரித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவ்வளவுதான்.

