இந்த முறை வெற்றி பெற்றாரா சசிகுமார்? – “காரி” திரை விமர்சனம்!

அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார், பார்வதி உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் காரி. தொடர்ந்து கிராமத்து படங்களில் நடித்து வந்த சசிகுமார் சமீபத்தில் மிருகமாய் மாறினார். ஆனால் அதுவும் கைகொடுக்காததால் மீண்டும் கிராமத்து பக்கம் ஒதுங்கிய படம்தான் காரி. எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர் மற்றும் சிவனேந்தல் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் கோயிலை நிர்வகிப்பதில் பல ஆண்டுகளாக சண்டை இருந்து வருகிறது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்தி அதில் வெற்றிபெறும் ஊர் கோயில் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். இதற்காக சென்னையில் இருக்கும் சசிகுமாரின் குடும்பத்தை ஊருக்கு வரவழைக்க முயற்சிக்கிறார்கள். இதனிடையே மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஜேடி சக்கரவர்த்திக்கும் சசிகுமாருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் தீர்வாக ஜல்லிக்கட்டு இருக்கிறது. அது என்ன என்பதே காரி.

காளைகளை அடக்கும் பிரபலமான பழங்கால விளையாட்டான ஜல்லிக்கட்டை அவற்றின் மையக் கதைகளில் ஒருங்கிணைக்கும் பல விஷயங்களை தமிழ் சினிமாவில் நாம் பார்த்திருக்கிறோம். சசிகுமாரின் காரி வேறு இல்லை. இருப்பினும், இங்கு விசேஷம் என்னவென்றால், கிராமப்புற அதிரடி நாடகம் விலங்குகளின் விடுதலை, பெருநிறுவன பேராசை, இறைச்சி உண்ணும் நெறிமுறைகள் மற்றும் நாம் அரிதாகவே சந்திக்கும் பிற விஷயங்களையும் விவாதிக்கிறது.

ஊரை விட்டு சென்னைக்கு சென்று தனது தந்தையுடன் குதிரை ஜாக்கியாக வாழ்ந்து வருகிறார் சசிகுமார். அவரது தந்தை வெள்ளசாமி (ஆடுகளம் நரேன்) சமூகப் பொறுப்புள்ள மனிதர் மற்றும் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பவர். ஒருகட்டத்தில் அப்பா இறந்துவிட தேடி வந்த உறவினர்களுடன் தனது சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு ஊர் மக்களுக்கு இருக்கும் பிரச்சினையை தன் பிரச்சினையாக்கி அனைத்திற்கும் தீர்வு காண்கிறார்.

இயக்குனர் ஹேமந்தின் எழுத்து பெரும்பாலான பகுதிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வப்போது இவர் பின்னணியில் கதை சொல்லும்போது நமக்குள்ளும் ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது. மேலும் அலுப்பில்லாத திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு பரபரப்பாகிறது.

செல்லமாக வளர்த்த குதிரையின் மரணம் மற்றும் குடும்பம் போல் வளர்க்கப்பட்ட காளை காணாமல் போவது போன்ற இரண்டு காட்சிகளில் மனித-விலங்கு பந்தத்தை அழகாக சொல்லி கண்ணீர் வரவழைக்கிறார். பால்மீனாவாக அறிமுக நாயகி பார்வதி அருண் நடிப்பில் அசரடித்துவிட்டார். தம்பியாக வளர்த்த காளைக்காக அவர் அழுது அடம்பிடிக்கும் காட்சி அவரது நடிப்புக்கு சான்று. நல்ல எதிர்காலம் உண்டு. நாயகியின் அப்பாவாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் அளவான நடிப்பை கொடுத்துள்ளார். ஆடுகளம் நரேன், பிரேம், சம்யுக்தா உள்ளிட்டோர் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

ஜே.டி. சக்ரவர்த்தியின் கதாபாத்திர‌ வடிவமைப்பு கொஞ்சம் லேசானதாக இருந்தாலும் குறைவில்லை. இமானின் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசை மிரட்டல். கிராமத்து படத்திற்கே உண்டான இசையை வழங்கியுள்ளார். சசிகுமாருக்கு இத்தகைய கிராமத்து படங்கள் தான் சிறப்பானதாக இருக்கும் என்பதை உணர்ந்து இயக்குனர் திரைக்கதை அமைத்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியும் அந்த கருப்பு காளையும் கம்பீரம். ஜல்லிக்கட்டு மாடுகள் எத்தனை அவசியம் என்பதையும் உரக்க சொல்லியுள்ளார் இயக்குனர். அதற்கு தொழில்நுட்ப குழுவும் உடன் நின்றுள்ளது.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments