2k கிட்ஸ் கொண்டாடும் “லவ் டுடே” திரைப்பட விமர்சனம்!

2k கிட்ஸ்கள் கொண்டாடும் லவ் டுடே திரைப்பட விமர்சனம்

கடந்த 2019ம் ஆண்டு ஜெயம் ரவி நடித்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோமாளி. இப்படம் மிகப் பெரிய வெற்றிபெற்றதுடன் பல்வேறு விருதுகளையும் குவித்தது. அப்படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் லவ் டுடே. இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, பரத், கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதன் அப்பா லாக் என்ற பெயரில் குறும்படமாக இயக்கியது தற்போது பெரும்படமாக உருவாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதனும் இவானாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இது இவானாவின் அப்பாவான சத்யராஜுக்கு தெரியவருகிறது. இதனை அடுத்து இருவரையும் வரவழைத்து பேசும் அவர் இருவரும் தங்களது செல்போனை ஒருநாள் மட்டும் மாற்றிவைத்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். அதன்படி பிரதீப்பின் செல்போன் இவானா கைக்கும் இவானாவின் செல்போன் பிரதீப் கைக்கும் செல்கிறது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. இறுதியில் பிரச்சினைகள் தீர்ந்து இருவரும் சேர்ந்தார்களா? என்பதே லவ் டுடே.

குறும்படமாக எடுக்கப்பட்டதை திரைப்படமாக உருவாக்க மிகப் பெரிய உழைப்பும் புத்திசாலித்தனமும் வேண்டும். அந்த விதத்தில் பிரதீப் இதில் வெற்றிபெற்று உள்ளார் என்றே சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு பிரதீப்பின் திரைக்கதை முக்கிய பங்கு வகிக்கிறது. திரைக்கதையில் பாக்யராஜ்தனமான குறும்புகளும் சென்ட்டிமென்டும் சேர்த்து விருந்து வைத்துள்ளார். இது லவ் டுடே அதாவது இன்றைய இளைய தலைமுறையின் காதலை சொல்வதால் எப்படி வேண்டுமானாலும் திரைக்கதையில் ஆபாசத்தை நுழைக்க முடியும் அதற்கான இடமும் அதில் இருக்கிறது. ஆனாலும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையில் அழகான படமாக கொடுத்துள்ளார். பிரதீப் சூப்பரான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது பாடிலாங்குவேஜ் பார்க்கும் போது தனுஷை நினைவுபடுத்துகிறார். நண்பர்களாக நடித்துள்ள பரத், கதிர் உள்ளிட்டோரின் இயல்பான காமெடி படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. சத்யராஜ் வழக்கம்போல் அசத்தியுள்ளார். குறிப்பாக தண்ணீர் கேன் போடும் நபரிடம் அவர் செய்யும் அழிச்சாட்டியம் நன்று. இவானா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாக செய்துள்ளார். ராதிகா பாசமான அம்மாவாக வந்து செல்கிறார். யோகிபாபு மீது இயக்குனருக்கு என்ன அன்பு என்று தெரியவில்லை. கோமாளி படத்தை போலவே இதிலும் அட்டகாசமான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். ஆரம்ப காலத்தில் தனது உருவத்தை வைத்து கிண்டல் செய்தவர்களுக்கு பதில்தரும்படி இதில் காட்சிகள் உள்ளன. பெண்களுக்கு செல்போன் மூலம் ஆபாச தொல்லை கொடுப்பவர்கள், அதனால் பாதிக்கப்படும் பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் வகையில் காட்சிகள் உள்ளன.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது. பின்னணி இசையில் யுவன் கம்பேக் கொடுத்துள்ளார். தனக்கு பிடித்த கதைக்களம் என்பதால் இறங்கி அடித்துள்ளார். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது. இன்றைய 2k கிட்ஸ்களின் காதல் கதையை எந்தவித ஆபாசமும் இன்றி சிறப்பான முறையில் எடுத்து நல்ல படமாக கொடுத்துள்ளார். 2k கிட்ஸ்கள் கொண்டாடும் வெற்றி இப்படம்.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments