பார்த்திபனின் “இரவின் நிழல்” விமர்சனம்!
உலகில் சில திரைப்படங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளன. ஆனால் ஒரே ஷாட்டில் ஒரு நான் லீனியர் படம் எடுக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அதனை சாத்தியப்படுத்தி தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்துள்ளார் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். 93 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் விதவிதமான கதாபாத்திரங்கள் அத்தனை பேரையும் நடிக்க வைத்து எடுப்பது அத்தனை சாதாரணமான காரியமல்ல. அதனை சாத்தியப்படுத்தியுள்ளார் பார்த்திபன்.
இந்த படத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகிடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சினிமா ஃபைனான்ஸியரான நந்து ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவரை போலீசார் கைது செய்ய துரத்தி வருகின்றனர். போலீசில் சிக்காமல் தன்னை காப்பாற்றிக் கொள்ள தனக்கு பரிச்சயமான போலிச் சாமியார் ரோபோ சங்கரின் ஆசிரமத்தில் ஒளிந்து கொள்கிறார். நந்துவுக்கு என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ஒரு சிறுவன் சொந்தக் காலில் நிற்க எத்தனை பாவங்களை செய்ய வேண்டி இருக்கிறது. தான் செய்த குற்றங்களையும் தனது வாழ்க்கையும் இதே சிங்கிள் ஷாட் படத்தில் நிகழ்காலம், கடந்த காலம் என மாற்றி மாற்றி பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக் காட்சிகளை எல்லாம் எந்தவொரு கட்டும் இல்லாமல் வைத்து அதனை பார்வையாளருக்கு கடத்தி இருக்கும் விதம் நந்துவின் வாழ்க்கையில் வரும் பெண்கள், அவனுக்கு செய்யும் நல்லது, கெட்டது கடைசியில் நந்துவுக்கு என்ன நடக்கிறது என்பது தான் இரவின் நிழல் படத்தின் கதை.

கதையாக பார்த்தால் சற்று மேலோட்டமாக தெரிந்தாலும் காட்சிப்படுத்திய விதத்தில் வழக்கமான பார்த்திபன் கண்முன் தெரிகிறார். நந்து என்ற நபரின் குழந்தை பருவம் முதல் 50வயது வரை பல்வேறு காலகட்டங்கள் படமாக விரிகிறது. நந்துவின் பாவம் அவனை எப்படி துரத்துகிறது என்பதையும் அவன் ஏன் இப்படி ஆனான் என்பதையும் முன்பின் விரியும் காட்சிகளின் வழி எங்கேயும் கட் செய்யாமல் நமக்கு காட்டியுள்ளார் பார்த்திபன்.
படத்தில் பார்த்திபனின் நக்கல் வசனங்கள் ஆங்காங்கே நம்மை ரசிக்க வைக்கின்றன. சிலர் செய்கின்ற பாவம் கங்கைக்கு போனால் தீரும் ஆனால் சிலரது பாவம் அந்த கங்கையோட போனாலும் தீராது ஆகிய வசனங்களில் பார்த்திபன் ஈர்க்கிறார். ஆனால் திகட்ட வைக்கும் கெட்ட வார்த்தைகள், முகம் சுழிக்க வைக்கும் ஆபாச காட்சிகள் படத்திற்கு மைனஸ். உலகத்தர சினிமா என்றாலே இதுபோன்ற காட்சிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று பார்த்திபன் நினைத்துவிட்டார் போல. கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
ஏஆர்.ரகுமான் படத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். பாவம் செய்யாதிரு மனமே பாடலில் நம்மை இயல்பாக கட்டிப்போட்டுவிடுகிறார். பின்னணி இசையை பற்றி நாம் சொல்லவேண்டியதில்லை. மேலும் படத்தில் ஆங்காங்கே அவரது முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது. தொழில்நுட்ப ரீதியில் அனைவரது கடுமையான உழைப்பு தெரிகிறது. புதுமையான படைப்பு என்ற ஒன்றை மட்டுமே முக்கிய குறிக்கோளாக நினைத்து திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் பார்த்திபன். ஒருவேளை திரைக்கதையே தேவை இல்லை என்று நினைத்துவிட்டாரோ. மொத்தத்தில் இரவின் நிழல் புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள்.

