ரசவாதி திரை விமர்சனம்!

ரசவாதி திரை விமர்சனம்!

 

தமிழ் சினிமாவில் மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப் படங்கள் என்றால் அது மெளனகுரு, மகாமுனி படங்கள் என்று ஆணித்தரமாக கூறலாம் காரணம் முற்றிலும் வித்தியாசமான அதோடு ஆழமான கருத்தை கொண்ட படங்களும் என்று கூறலாம். அப்படிப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு தான் ரசவாதி.

இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ஜி எம் சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சரவணன் இளவரசு. இசையமைத்திருக்கிறார் தமன்.

தனது முந்தைய இரு படங்களாலும் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பெருமை இயக்குனர் சாந்தகுமாருக்கு உண்டு. இரண்டு படங்களின் வெற்றியால் மூன்றாவது படமான ரசவாதி மீதும் அதீத எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்திருக்கிறாரா இல்லையா என்பதை இந்த விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

நாயகனான அர்ஜூன் தாஸ், கொடைக்கானலில் ஒரு சித்த மருத்துவராக வாழ்ந்து வருகிறார். அங்கிருக்கும் மக்களுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். அங்குள்ள இயற்கையை பேணிக் காப்பதும், பூச்சிகள் முதல் விலங்குகள் வரையிலான உயிர்களுக்கு இரக்கம் காட்டுவது என மென்மையான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார்.

அங்கு இருக்கும் ஒரு தனியார் ரெஸ்டாரன்டில் மேனேஜர் பணிக்காக வந்து சேர்கிறார் நாயகி தன்யா. இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த சந்திப்பில் தங்களது மனதை கொடுத்து காதலுக்குள் செல்கின்றனர்.

இந்த சூழலில், அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் சுஜித் சங்கர். சிறு வயதில் தனது தாய், தந்தையரின் சண்டையை நேரில் பார்த்து வளர்ந்த சுஜித், ஒரு விதமான இறுக்கமான மன நிலையிலேயே இருந்து வருகிறார்.

இந்நிலையில், அர்ஜூன் தாஸ் மற்றும் தன்யா இருவரும் காதல் புரிவதை பார்த்து பார்த்து தனக்குள் கோபத்தை வளர்த்துக் கொண்டே இருக்கிறார் சுஜித். இவர்களது காதலை பிரித்து அர்ஜுன் தாஸை பழி வாங்க வேண்டும் என்று எண்ணுகிறார் சுஜித். அவரை பழி வாங்குவதற்கான காரணம் என்னவென்று இரண்டாம் பாதியில் காட்டப்படுகிறது.
அர்ஜூன் தாஸுக்கும் சுஜித்திற்கும் இடையே இருக்கும் பகை தான் என்ன.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கைதியில் ஆரம்பித்த மிரட்டல் நடிப்பை ரசவாதி வரையிலும் கொண்டு வந்திருக்கிறார் நாயகன் அர்ஜூன் தாஸ். இதுவரை அதிரடிக்காரனாக வந்த இவர் இந்த படத்தில் இயற்கை நேசிப்பவராக வந்து பல இடங்களில் அவர் பேசும் வசனங்கள் திரையரங்குகளில் கைதட்டல் சத்தத்தை கேட்க முடிகிறது. கண்களாலும், குரலாலும் மிரள வைக்கும் நடிப்பால் ஆங்காங்கே நம்மை மிரள செய்கிறார் அர்ஜூன் தாஸ்.

அழகு தேவதையாக படம் முழுக்க மனதில் நிற்கும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன். நடிப்பிலும் மிக நேர்த்தியான ஒரு நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடிப்பார்.

படத்தின் மற்றொரு கதாநாயகியாக தோன்றி, தனது முதல் படத்திலேயே முத்திரை நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ். பரதநாட்டியம் நடனத்தில் ஆரம்பித்து, அர்ஜூன் தாஸுடனான காதல், திருமணத்திற்கு பின்னுடனான நடிப்பு என பல கோணங்களில் அசர வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ரேஷ்மா. கோலிவுட்டில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

வில்லனாக தோன்றி மிரட்டியிருக்கிறார் சுஜித் சங்கர். அவரது பார்வையும் உடல் மொழியும் படம் பார்ப்பவர்களை பயமுறுத்தும் அளவிற்கு கதாபத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் சுஜித்.

மற்றபடி, கதையில் நடித்த ரிஷிகாந்த், ரம்யா, ஜி எம் சுந்தர் என அனைவரும் கதைக்கேற்ற நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.

இயற்கை வளம், மண், மரம், கொடி, அரசியல், காதல் என பல இடங்களில் தனக்கான முத்திரை இயக்கத்தை கொடுத்து பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார் இயக்குனர் சாந்தகுமார்.

அர்ஜூன் தாஸ் மற்றும் ரேஷ்மாவின் காதல் இசையாக கோர்த்து காதலை நகர்த்தியிருந்தது பார்ப்பதற்கு ரசனையாக இருந்தது. வசனங்கள் படத்திற்கு மிகப்பெரும் பலம்.
படத்தில் கைதட்ட வைக்கும் காட்சிகள் பல இருக்கின்றன. தனது முந்தைய இரண்டு படங்களை போலவே இப்படத்திலும் முத்திரை பதித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.

ஆனால் முதல் பாதி முழுவதும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை காட்டுவதற்கு மட்டுமே காட்சிகளை அடுக்கியுள்ளார். இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ் பேக் காட்சிகளும் கதைக்கு தொடர்பில்லாத ஒன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி ஏமாற்றம்.

ஒளிப்பதிவு மற்றும் தமனின் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு பக்கபலமாக வந்து நிற்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இந்த ரசவாதி ரசிக்க வைத்திருப்பான். மொத்தத்தில் ரசவாதி – ரசிக்க முடியவில்லை. ரேட்டிங் 3/5.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments