கேப்டன் மில்லர் திரை விமர்சனம்!
கேப்டன் மில்லர் திரை விமர்சனம்!
![]()
தமிழ் சினிமாவில் ராக்கி, சாணிக்காயிதம் படங்களின் மூலம் வித்தியாசமான மேக்கராக அறியப்பட்டவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். இவர் நடிகர் தனுஷை வைத்து படம் இயக்குகிறார் என்றதும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இவர் தனுஷை வைத்து இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதை 1930ல் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயப்பிரகாஷ் கீழான சமஸ்தானத்தில் நடிகர் தனுஷ் தனது மக்களுடன் வாழ்ந்து வருகிறார். அது ஆங்கில ஆட்சிக் காலம் என்பதால் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு உள்ள கோயிலுக்குள் 600 ஆண்டுகளாக அந்த மக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஒடுக்கப்பட்டு வாழ்வதை விட ஆங்கிலேய படையில் சிப்பாயாக சேரலாம் என்று சேர்கிறார். பயிற்சி முடிந்ததும் சுதந்திரத்துக்காக போராடும் சொந்த மக்களையே சுட்டுக் கொல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் கோபமடைந்து ஆங்கிலேயே அதிகாரியை கொலை செய்துவிட்டு ஊர் ஊராக சுற்றித் திரிந்து கொள்ளைக்காரனாக மாறுகிறார். ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் இவரை தேடுகிறது ஆங்கிலேயப் படை. இதனால் இவரது ஊர் மக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதன்பிறகு என்ன ஆனது என்பது தான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் மிகப் பெரிய பலம் தனுஷ். முழு படத்தையும் தனது தோலில் தாங்குகிறார். தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் கூஸ்பம்ப் வரவைக்கிறார். வழக்கமான அருண் மாதேஸ்வரன் மேக்கிங்காக இருந்தாலும் திரையில் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. 600 வருடங்களாக கோயிலுக்குள் செல்ல முடியாத மக்களை உள்ளே செல்ல வைப்பதுதான் கதை என்றாலும் அதனை ஆங்கிலேயே அடக்குமுறை, ஆதிக்க சாதியினர் கொடுமை, சுதந்திர போராட்டம் என சேர்த்து இயக்கியுள்ளார். தனுஷின் மிரட்டல் நடிப்புக்கு மத்தியில் மற்ற நடிகர்களின் நடிப்பு மறைந்து விடுகிறது. ஆனாலும் அவர்களின் நடிப்பும் படத்திற்கு பலமாக உள்ளது. ஆனாலும் தனுஷிற்கு இன்னும் ஆழமாக காட்சிகள் வைத்திருக்கலாம்.

தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ் குமார், உடன் பயிற்சி பெற்றவராக வரும் சந்தீப் கிஷன், மருத்துவராக வரும் பிரியங்கா மோகன், கொள்ளைக்கூட்டத்தினராக வரும் குமரவேல், நிவேதிதா சதீஷ் என அனைவரும் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.
படத்தின் மற்றொரு முதுகெலும்பு என்றால் அது ஜிவி பிரகாஷ் குமாரின் இசைதான். பாடல்கள் பரவாயில்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். கிளைமாக்ஸ் காட்சி மற்றும் சண்டைக் காட்சிகளில் வேற லெவல் உழைப்பை கொடுத்துள்ளார். ஜிவி பிரகாஷின் பெஸ்ட் எனலாம். சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவு படத்தின் தளத்தை அதிகரித்துள்ளது. ராமலிங்கத்தின் கலை இயக்கம் பிரமாதம். கோயில், துப்பாக்கிகள், அந்த கால வாகனங்கள் என கடினமாக உழைத்துள்ளனர். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் படத்தை அத்தியாயங்களாக பிரித்து கதை சொல்லியுள்ளார். அது ரசிக்க வைக்கிறது. ஆனால் சுற்றிவளைத்து சொல்லும் சில காட்சிகள் குழப்பம். மொத்தத்தில் கேப்டன் மில்லர் வின்னர். ரேட்டிங் 4/5.

