அண்ணே யாரு “தளபதி” – விம்பிள்டன் வரை சென்ற “வாத்தி கம்மிங்”!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் மாஸ்டர். இப்படத்தில் அனிருத் இசையில் வெளியான பாடல்கள் வைரல் ஹிட் அடித்தது. பொதுவாக விஜய் படங்களின் பாடல்கள் என்றாலே அது உலக லெவல் ஹிட் அடிக்கும். மாஸ்டர் படத்தில் வெளிவந்த வாத்தி கம்மிங் என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது.
உலகின் பல நாடுகளில் இருந்தும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ரீல்கள் வெளியாகி இணையத்தை அதிரவைத்தது தனிக்கதை. சோபாவில் தூங்கிக் கொண்டிருக்கும் விஜய்யை மாணவர்கள் வீட்டுக்கே சென்று எழுப்பி கல்லூரி விழாவுக்கு அழைத்து வரும் போது அமைக்கப்பட்ட வாத்தி கம்மிங் பாடலுக்கு, நடிகர் விஜய் வெறித்தனமான ஆட்டத்தை போட்டிருப்பார். விஜய்யின் ரியல் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட சில நடிகர்களும், ஆண்ட்ரியாவும் விஜய்யுடன் சேர்ந்து அந்த பாட்டுக்கு ஆட்டம் போட்டிருப்பார்கள்.
இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வரிகளை விம்பிள்டன் டென்னிஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலேயே டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரின் வருகைக்கு பயன்படுத்தி உள்ளனர். இதனை கண்டதும் விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் உலகளவிலான ரீச்சை பார்த்து கொண்டாடி வருகின்றனர். மீண்டும் வாத்தி கம்மிங் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இன்னொரு தரப்போ இது போலியானது என்று கூறி வருகின்றனர். உண்மையோ போலியோ பெடரருக்கும் இந்த பாட்டு பொருந்தும் தானே..

