ரணம் அறம் தவறேல் படத்தின் திரைவிமர்சனம்!
ரணம் அறம் தவறேல் படத்தின் திரைவிமர்சனம்!
![]()
அறிமுக இயக்குனர் ஷெரீப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ரணம் அறம் தவறேல். அடையாளம் தெரியாத குற்றவாளிகளை கண்டுபிடிக்க நேரில் பார்த்தவர்கள் சொன்னதை வைத்து இப்படித்தான் இருப்பார்கள் என்று ஓவியர் வரைந்து காட்டுவார். அப்படி அந்த ஓவியரை நாயகனாக வடிவமைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் ஷெரீப். படத்தில் நாயகன் வைபவ், அடையாளம் தெரியாத வகையில் கொலை செய்யப்பட்டு இருக்கும் சடலத்தை பார்த்து உயிரிழந்தவர் உருவத்தை வரைந்து கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். அப்படி போலீசுக்கும் எப்படி கொலை நடந்திருக்கலாம் என்றும் எழுதி தருவார். மாதவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அட்டைப் பெட்டியில் கை, கால்கள், உடல் என தனித்தனியாக கருகிய நிலையில் வைக்கப்படுகிறது. அந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இதனை விசாரிக்க புதிய இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப் வருகிறார். அவருக்கு வைபவ் உதவி செய்கிறார். கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தார்களா ? என்பதே இப்படத்தின் கதை.
வைபவ் படம் முழுவதும் சிரிக்காமலே இருக்கிறார். அமைதியாக தனது வேலையை செய்துவிட்டு போகிறார். தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். விபத்தில் காதலியை இழந்த சோகத்தில் இருப்பவருக்கு திடீரென மூளை ஒரு நிமிடம் ப்ரீஸ் ஆகும் நோய் வேறு இருக்கும். படம் முழுவதும் நன்றாகவே நடித்துள்ளார். இன்ஸ்பெக்டராக தன்யா ஹோப் கவனம் ஈர்க்கிறார். போலீசுக்கான உடல்மொழி, கம்பீரம் குறையாமல் சிரமமின்றி நடித்துள்ளார். நந்திதா ஸ்வேதாவுக்கு கதாப்பாத்திரம் மிக முக்கிய கதாப்பாத்திரம் மிகையின்றி நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் அழுத்தமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வைபவ் காதலியாக ஃபிளாஷ்பேக்கில் வந்து இறந்து போகிறார் சரஸ்வதி மேனன்.

ஒரு க்ரைம் படத்திற்கு அதன் சஸ்பென்ஸ் மிக முக்கியமான ஒன்று. கடைசி வரை யார் கொலையாளி என்ற சஸ்பென்ஸ் சிறப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இயக்குனரின் திரைக்கதை திறமைக்கு இது ஒரு சான்று. இதனால் ரசிகர்கள் உச்சகட்ட டென்ஷனில் நிச்சயம் இருப்பார்கள். படத்தில் காட்டப்படுவது போல் மருத்துவமனையில் நடக்குமா என்று நினைத்துப் பார்த்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது. அரோல் கொரோலியின் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாக உள்ளது இதனால் வசனங்கள் புரியவில்லை. ஒளிப்பதிவும் நன்று. மொத்தத்தில் இதுபோன்ற நிறைய க்ரைம் த்ரில்லர் படங்கள் வந்திருந்தாலும் திரைக்கதையில் வித்தியாசம் செய்து ரசிக்க வைக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதி ஃபிளாஷ்பேக் காட்சியின் நீளத்தையும் சில குழப்பங்களையும் சரி செய்திருந்தால் இன்னும் சிறப்பான படமாகவே வந்திருக்கும். ரணம் – சினம். ரேட்டிங் 3.5/5

