ஜேம்ஸ் கேமரூனின் மாயாஜாலம் வெற்றிபெற்றதா? – “அவதார் 2” திரைவிமர்சனம்!
![]()
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளிவந்த படம் அவதார். இதுவரை ஹாலிவுட் படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற ரசிகர்களின் எண்ணத்தை கூண்டோடு மாற்றியது. அவர் காட்டிய பாண்டோரா உலகத்தில் இருந்து இப்போது வரையும் ரசிகர்கள் மீளவில்லை எனலாம். அப்படி இருக்க 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் உலகிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படமாக இது உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் நள்ளிரவு 12 மணிக்கே முதல் காட்சிகள் திரையிடப்பட்டன. டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டன. கதைப்படி முதல் பாகத்தில் பாண்டோரா மக்களுடன் மக்களாக கலந்துவிட்ட நாயகன் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக கதை முடிந்தது. அதன் தொடர்ச்சியான இடப்பாகத்தில் நாவி இன மக்களாக பாண்டோராவில் தனது மகன்கள் மற்றும் மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன். இந்நிலையில் நாயகனை தேடி அழிக்க மிலிட்டரியில் இருந்து உயிரிழந்த கர்னலின் குளோனிங்கை அனுப்புகிறது ராணுவம். அதுவும் நாவி இனத்தைச் சேர்ந்தவர்போல தோற்றத்தில் அனுப்பப்படுகிறார்கள் கர்னல் மற்றும் குழுவினர்கள். இதனை அறிந்த நாயகன் தாம் இங்கிருந்தால் தன் இனைத்தையும் சேர்ந்து அழித்துவிடுவார்கள் என அங்கிருந்து குடும்பத்துடன் கிளம்பிவிடுகிறார். காட்டில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கும் ஒரு தீவில் வசித்துவரும் மற்றோரு இனத்திடம் அடைக்கலம் கேட்கிறார் நாயகன். கடல்வாழ் கூட்டத்தினரான அவர்களும் அடைக்கலம் கொடுக்கின்றனர். ஆனால் அந்த இடமும் வில்லனுக்கு தெரிய நாயகனை தேடி வருகிறார். இறுதியில் வில்லனிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் நாயகன் எப்படி காப்பாற்றினார் என்பதே அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர்.
![]()
முதல் பாகத்தை போலவே இந்த பாகமும் விஷுவலாக மிரட்டியுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். காட்டுக்குள் இருந்து கடல் பகுதிக்கு வந்தவுடன் கடலும் அதிலுள்ள உயிரினங்களும் பார்க்கும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. டெக்னிக்கலாக படம் மிரட்டல் தான். ஆனால் கதையும் திரைக்கதையும் சொதப்பி விட்டது. முதல் பாதி முழுவதும் ரொ….ம்ப மெதுவாக செல்வது மைனஸ். இரண்டாம் பாதியில் எந்தவித திருப்பமும் இல்லாமல் மோலோட்டமாக செல்கிறது. கடைசி அரைமணி நேரம் பரபரப்பு குறையாமல் செல்கிறது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சி கேமரூனின் டைட்டானிக் படத்தை நினைவூட்டுகிறது. தந்தை, மகன் பாசம் , இனம் குறித்தும் கேமரூன் பேசியுள்ளார்.
தமிழ் கமர்ஷியல் படங்களில் வருவது போல் வில்லனிடம் இருந்து நாயகன் தனது குடும்பத்தை காப்பாற்றும் அதே கதைதான் இதுவும். ஆனால் என்ன விஷுவலாக படம் வேற லெவல். அதுவும் 3டியில் பார்த்தால் மூன்றுமணி நேரம் வேறு உலகத்தில் நீங்கள் வாழ்ந்துவிட்டு வருவீர்கள்.
உங்களுக்கு படம் பிடிக்குதோ இல்லையோ கண்டிப்பாக ஒருமுறையாவது இப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்துவிடுங்கள். இல்லையேல் நஷ்டம் உங்களுக்குத்தான்.

