அருண் விஜயின் “சினம்” விமர்சனம்!

 

இயக்குனர் ஜிஎன்ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய்‌ நடித்து வெளிவந்துள்ள படம் சினம். இப்படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பற்றியும் குற்றவாளிகளுக்கு எந்த மாதிரியான தண்டனை தேவை என்பதை பற்றியும் பேசுகிறது.

காவல் உதவி ஆய்வாளரான அருண் விஜய் நேர்மையானவர். இதனால் இவருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் ஆகாது. தாய், தந்தையில்லாத அருண் விஜய், நாயகி பாலக் லால்வனியை காதலிக்கிறார். ஆனால் நாயகியின் அப்பா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் கோயிலில் திருமணம் செய்துகொள்கின்றனர். ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. இப்படி நன்றாக வாழ்க்கை சென்றுகொண்டிருக்க ஒருநாள் இரவு நாயகி ஒரு ஓடை அருகே மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார். அருகிலேயே ஒரு ஆணின் சடலமும் கிடக்கிறது. அருண் விஜய்யை பழிவாங்க நினைக்கும் இன்ஸ்பெக்டர் இதனை கள்ளக்காதலால் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக வழக்கு பதிகிறார். இதனால் கோபமடையும் அருண் விஜய் இன்ஸ்பெக்டரை தாக்க, சஸ்பென்ட் செய்யப்படுகிறார். ஒரு கட்டத்தில் தனக்கு போலீஸ் வேலையே வேண்டாம் என்று உயர் அதிகாரியிடம் சொல்ல அருண் விஜயின் நேர்மை பற்றி தெரிந்த அவரோ சஸ்பென்ட்டை நீக்கி இந்த வழக்கை அருண் விஜயிடம் விசாரிக்குமாறு கொடுக்கிறார். வழக்கை விசாரிக்கும் அருண் விஜய் கொலையாளிகளை கண்டுபிடித்தாரா? தன் மனைவி மீதான தவறான பழியை நீக்கினாரா? என்பதுதான் சினம் படத்தின் கதை.

அருண் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக மின்னலாக தெறிக்கிறார் அதேபோல ஒரு தகப்பனாகவும் ஒரு காதலனாகவும் நடிப்பில் ஜொலிக்கிறார். இயக்குனரின் உணர்வை புரிந்து கூச்சல் இறைச்சல் இல்லாமல் மிகவும் அமைதியான எதார்த்தமான நடிப்பில் இயக்குனருக்கு பலம் சேர்ந்து உள்ளார். ஏற்கனவே நிறைய போலீஸ் படங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் சின்ன சின்ன அசைவுகளில் வேறுபாடு காட்டி அசத்தியுள்ளார்.

அறிமுகநாயகி பாலக் லால்வனி தன் முதல் படத்திலே தன் சிறப்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார். பாதியிலேயே இறந்து போவதுதான்‌ பாவம்.

படத்தின் அடுத்த பலம் இசையமைப்பாளர் ஷபீர் அருமையான பாடல்கள் கதைக்கு ஏற்ப பின்னணி இசை என்று இயக்குனருக்கு பலமாக இருக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இசையமைப்பாளராக வலம் வருவார். சமீபகாலமாக குணச்சித்திர வேடத்தில் கலக்கி‌வரும் காளி வெங்கட் இதிலும் தனது சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளார்.

இயக்குனர் . ஜி.என். ஆர். குமாரவேலன் மிக நேர்த்தியான கதையம்சம் கொண்ட கதையுடன் ரசிகர்களை சந்தித்துள்ளார் இன்றைய சமுதாயாத்துக்கும் தேவையான ஒருகதையம்சம் கொண்ட படமாக அமைத்துள்ளார். முதல்பாதி கதை மிகவும் அற்புதமான காதல் கதையாகவும் அடுத்த பாதி மிகவும் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியின் கதையோடு சமுதாயச் சிந்தனை கலந்த ஒரு கதையாக கொடுத்துள்ளார்.

சமுதாயத்தில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான அத்துமீறல்கள், கொடுமைகள் நடந்து வருவது குறைவதே இல்லை என்றாலும் இதுபோன்ற படங்கள் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments