எம்ஜிஆர் எங்களுக்காக விட்டுச்சென்றுள்ளார் – பொன்னியின் செல்வன் குறித்து மணிரத்னம் பேச்சு!

 

லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:

இயக்குனர் மணிரத்னம் பேசும்போது,

நான் கல்லூரி ஆரம்பிக்கும்போது இந்த புத்தகம் படித்தேன். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நெஞ்சை விட்ட நீங்கவில்லை. கல்கிக்கு முதல் நன்றி. இப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க வேண்டியது. ஆனால், முடியாமல் போனதற்கான காரணம் இன்று புரிந்தது. எங்களுக்காக விட்டு சென்றிருக்கிறார். எவ்வளவு பேர் முயற்சித்திருக்கிறார்கள். நானும் 3 முறை 1980 களில் இருந்து முயற்சி செய்து இன்று தான் முடித்திருக்கிறேன். இங்கு உள்ளவர்கள் அனைவராலும் தான் இது சாத்தியமானது. இவர்கள் இல்லையென்றால், இது சாத்தியமில்லை. முக்கியமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி என்றார்.

 

இசையாமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பேசும்போது,

30 வருடங்களாக எனக்கு பாஸ் மணிரத்னம் சார் தான். ஒருவருக்குள் இருக்கும் திறமையை எப்படி வெளியே எடுப்பது என்பதை நான் மணி சாரிடம் தான் கற்றுக் கொண்டேன். பொறுமை, மனிதநேயம், அன்பு, ஊக்குவித்தல் என்றவர் தான் மணி சார். இப்படத்திற்கு இசையமைக்க பல இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்தோம். அப்போது பாலி என்ற இடத்திற்கு சென்று 2 வாரம் தங்கி அங்குள்ள இசைக்கருவிகளை பற்றி ஆராய்ச்சி செய்தோம். அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அந்த காலத்திலும் அனைவரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியிருக்கிறார்கள். ஆகவே, இது நம் எல்லோருடைய படம் என்று கூறவேண்டும் என்றார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசும்போது,

இப்பட வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம். மணி சாரைப் பற்றி நிறைய கூறலாம். அவர் சிறந்த நண்பர், ஆசிரியர், வழிகாட்டி என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்பட வாய்ப்பு கிடைத்து சந்தோஷத்துடன் வீட்டிற்கு வந்தேன். வந்ததும் பயம் வந்தது. இப்படத்தை எப்படி செய்ய போகிறேன், அதுவரை உயிரோடு இருப்போமா? என்று பலவித பயம் இருந்தது. மணி சார் அதையெல்லாம் உடைத்து நம்பிக்கை கொடுத்தார். இப்படம் தமிழின் அடையாளம். தமிழ் இருக்கும் வரை பொன்னியின் செல்வன் அடையாளமாக இருக்கும் என்றார்.

 

லைகா தமிழ்குமரன் பேசும்போது,

இன்று சில கலைஞர்களைத் தான் பார்த்தீர்கள். இன்னும் நாட்கள் செல்ல செல்ல இப்படத்தில் நடித்த அனைவரையும் பார்க்கலாம். இன்று டீசர் மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. இன்னும் டிரைலர், இசை வெளியீடு என்று செப்டம்பர் 30 படம் வெளியாகும் வரை நிறைய இருக்கிறது என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments