ராமன் போல் வில்லேந்தி நிற்கும் தனுஷ் – நானே வருவேன் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!
நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன், திருவிளையாடல் ஆரம்பம், படிக்காதவன், அசுரன், கர்ணன் போன்ற படங்களின் மூலமாக முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று சாதனை படைத்தார். ஹாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள தி கிரேமேன் திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் நானே வருவேன். இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இதில் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது 40வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதற்காக நானே வருவேன் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காட்டுக்குள் கையில் வில்லுடன் தனுஷ் நின்றுகொண்டு இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்களும் தனுஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

