தீண்டாமை பார்க்கும் ரோகிணி தியேட்டர் – சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் கண்டனம்!
தீண்டாமை பார்க்கும் ரோகிணி தியேட்டர் – சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் கண்டனம்!

சென்னையில் உள்ள பிரபல ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வந்த நரிக்குறவர் பெண்ணை தீண்டாமை பார்த்து உள்ளே விடாத செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு , கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. இப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோகிணியில் பத்து தல படம் திரையிடப்பட்டுள்ளது.
இப்படத்தை காண ரசிகர்கள் பலரும் காலை முதலே ரோகிணி திரையரங்கில் திரண்ட நிலையில் டிக்கெட்டுடன் வந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்களை உள்ளே விடாமல் தியேட்டரில் பணிபுரிந்த பணியாளர் ஒருவர் தடுத்துள்ளார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து ரோகிணி திரையரங்கில் தீண்டாமை பார்க்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த பணியாளர்கள் பிரச்சனை வரக்கூடாது என்று அவர்களை உள்ளே அனுமதித்துள்ளனர். படம் தொடங்கி பாதி படம் ஓடிய பிறகு அவர்கள் படம் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் ரோகிணி திரையரங்கின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த விஷயத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். கலைகள் அனைவருக்கும் பொதுவானது என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க ரோகிணி திரையரங்கம் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. அதில் பெண்களுடன் குழந்தைகள் வந்துள்ளனர். பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படம் எனவே அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. யு/ஏ என்றால் பெற்றோர் வழிகாட்டுதல் படி குழந்தைகளும் படம் பார்க்கலாம் தானே என்று கருத்தும் பரவி வருகிறது.
சென்னை ரோகிணி திரையரங்கின் இந்த செயலால் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

