அப்பா குட்டி திரைப்பட விமர்சனம்!

அப்பா குட்டி திரைப்பட விமர்சனம்: விஜய் ஆண்டனியின் அப்பா பாசம்… கிளைமாக்ஸில் கவனம் ஈர்க்கும் சிறுமி! எப்படி இருக்கிறது ‘அப்பா குட்டி’?

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? பார்க்கலாம்.

**கதைக்களம்:**

மனைவியை இழந்த விஜய் ஆண்டனி, தனது மகளுடன் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார். மகளின் பள்ளி ஆசிரியையான ப்ரீத்தி அஸ்ரானி, விஜய் ஆண்டனியை ஒருதலையாகக் காதலிக்கிறார்.

இந்தச் சூழலில், திடீரென விஜய் ஆண்டனியின் மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. சிறுமியைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள், மரபணு தொடர்பான ரத்தக் கோளாறால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். உடனடியாக ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

இதற்காக விஜய் ஆண்டனியும் அவரது மனைவியும் மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்போதுதான் விஜய் ஆண்டனிக்குத் திருமணமே ஆகவில்லை என்பதும், அவர் வளர்க்கும் சிறுமி ஆதரவற்ற குழந்தை என்பதும் தெரியவருகிறது.

சிறுமியைக் காப்பாற்ற வேண்டுமானால், அவரது உண்மையான பெற்றோர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. இதையடுத்து அவர்களைத் தேடிப் புறப்படுகிறார் விஜய் ஆண்டனி. இறுதியில் என்ன நடந்தது? சிறுமியின் உடல்நிலை சரியானதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

**நடிப்பு:**

நாயகன் விஜய் ஆண்டனி, பாசமான தந்தையாகத் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் தந்தையாக நடித்துள்ளார். ஆனால், அந்தப் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பல காட்சிகள் செயற்கையாக இருப்பதால், சில இடங்களில் அவரது நடிப்பும் ரசிகர்களிடம் சரியாகக் கனெக்ட் ஆகவில்லை.

ப்ரீத்தி அஸ்ரானி தனது கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரது நடிப்பு, ‘நமக்கும் இப்படி ஒரு டீச்சர் கிடைக்கவில்லையே!’ என்று சொல்ல வைக்கிறது.

விஜய் ஆண்டனியின் மகளாக நடித்துள்ள சிறுமி லிதன்யா, இயல்பான நடிப்பாலும் குறும்புத்தனமான பேச்சாலும் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் தனது நடிப்பால் ஒட்டுமொத்தப் படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், ஹரிப்பிரியா, ஸ்ரீஜா ரவி, குமார் நடராஜன், பிரவீனா, லிஸி ஆண்டனி, சித்ரா லட்சுமணன், மூணாறு ரமேஷ், ஜென்சன் திவாகர் எனப் படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

**தொழில்நுட்பம்:**

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரனின் கேமரா ஒர்க் அளவாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக உள்ளன. பின்னணி இசையும் நன்றாக அமைந்துள்ளது.

**திரைக்கதை & இயக்கம்:**

உண்மைச் சம்பவத்தைத் தழுவி இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் மு. மாறன்.

ஆனால், முதல் பாதி முழுவதும் சுவாரஸ்யமற்ற காட்சிகள் ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கின்றன. அப்பா – மகள் இடையேயான பாசத்தைச் சொல்ல நினைத்த இயக்குநர், அதற்கேற்ற வகையில் இன்றைய காலகட்டத்துக்கு பொருத்தமான சுவாரஸ்யமான காட்சிகளை அமைத்திருக்கலாம்.

கதையின் உணர்வுப்பூர்வமான அம்சங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டிய இடங்களில் திரைக்கதை தடுமாறுகிறது. கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

**மொத்தத்தில்:**

அப்பா – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும், அதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லத் தவறியிருக்கிறது ‘அப்பா குட்டி’. சிறுமி லிதன்யாவின் நடிப்பும் கிளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே படத்தின் ஆறுதல்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted