சத்தியவான் சாவித்திரி திரைப்பட விமர்சனம்!
சத்தியவான் சாவித்திரி திரைப்பட விமர்சனம்: கீர்த்தி சுரேஷின் அதிரடி வாதங்கள்… மிஷ்கினின் நடிப்பு! எப்படி இருக்கிறது ‘சத்தியவான் சாவித்திரி’?

புராணக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
**கதைக்களம்:**
சட்டப்படிப்பை முடித்துள்ள கீர்த்தி சுரேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக இருக்கும் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்ற விரும்புகிறார். அதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கிறது. ஆனால், இதற்கிடையே அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. விருப்பமில்லாமல் கணவருடன் சென்னைக்கு வரும் கீர்த்தி சுரேஷ், தனது கனவுக்கு கணவர் சம்மதம் தெரிவிக்கவே மிஷ்கினிடம் உதவியாளராகச் சேர்கிறார்.
தனது முதல் வழக்கிலேயே குருநாதரான மிஷ்கின் வெற்றி பெறவிருக்கும் சூழலில், அவருக்கு எதிராகவே வாதாடி வழக்கில் வெற்றி பெறுகிறார் கீர்த்தி சுரேஷ்.
இதற்கிடையே, கீர்த்தி சுரேஷின் கணவர் கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. கணவருக்கு ஆதரவாக கீர்த்தி சுரேஷ் வாதாட, அவருக்கு எதிராக மிஷ்கின் ஆஜராகிறார். இறுதியில் என்ன நடந்தது? தனது கணவர் குற்றமற்றவர் என்பதை கீர்த்தி சுரேஷ் நிரூபித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
**நடிப்பு:**
புராணக் கதையான சத்தியவான் – சாவித்திரி கதையை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் தனது துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுவதும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் தயக்கத்துடன் வாதாடுவது, பின்னர் மிஷ்கின் கூறிய வார்த்தைகளையே அடிப்படையாகக் கொண்டு அவரைத் தோற்கடிப்பது என சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, இரண்டாம் பாதியில் கணவருக்காக நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
மிஷ்கினின் மிகையான நடிப்பு ஆரம்பத்தில் ரசிக்கும்படியாக இருந்தாலும், போகப்போகச் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஒரே மாதிரியான மேனரிஸமும், வசன உச்சரிப்பும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.
**திரைக்கதை:**
படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது. கதைக்குள் செல்வதற்கே அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். படத்தில் மொத்தம் இரண்டு வழக்குகள்தான் இடம்பெறுகின்றன. அதில் முதல் வழக்கு கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தை உருவாக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் பாதி முழுவதும் கணவரைக் காப்பாற்ற கீர்த்தி சுரேஷ் நடத்தும் உணர்வுப்பூர்வமான சட்டப் போராட்டமாக நகர்கிறது. பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்திலேயே நடைபெறுகின்றன. ஆனால், புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை நம்பியே பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன. ஆனால், அந்தத் திருப்பமும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
**தொழில்நுட்பம்:**
படம் முழுவதும் நீதிமன்றத்துக்குள்ளேயே நடைபெறுவதால், அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சாம் சி.எஸ். இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக அமைந்துள்ளன.
**இயக்கம்:**
புராணக் கதையை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றி கதையாக்கியுள்ள இயக்குநர் பிரவீன் எஸ். விஜய், திரைக்கதையிலும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் சேர்த்திருக்கலாம்.
கீர்த்தி சுரேஷின் சிறப்பான நடிப்பும், நீதிமன்றக் காட்சிகளும் படத்துக்குச் சாதகமாக இருந்தாலும், மெதுவான திரைக்கதையும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத கிளைமாக்ஸும் பலவீனம். மொத்தத்தில், ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தை ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.

