மெய்யழகன் திரைப்பட விமர்சனம்!
மெய்யழகன் திரைப்பட விமர்சனம்!
![]()
96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார் என்றதுமே அப்படத்தின் மீது ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.
குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் அரவிந்த் சாமியின் குடும்பம் சிறு வயதிலேயே சென்னையில் சென்று செட்டில் ஆகிவிடுகிறது. 22 வருடங்கள் கழித்து தனது சித்தப்பா மகளின் திருமணத்திற்கு நீடாமங்கலம் செல்ல வேண்டிய சூழல் அரவிந்த் சாமிக்கு வருகிறது. இரவு திருமணத்தை முடித்துவிட்டு உடனே சென்னை திரும்ப வேண்டும் என்பது அரவிந்த் சாமியின் திட்டம். ஆனால்
அங்கு வரும் அவரை யார் என்றே தெயாயாத நடிகர் கார்த்தி அத்தான் அத்தான் என கூடவே வருகிறார். அரவிந்த் சாமிக்கு கார்த்தியின் அதீத அன்பு தொல்லையை கொடுக்கிறது. ஒருகட்டத்தில் கார்த்தி வீட்டில் ஓர் இரவு தங்க வேண்டிய சூழல் வருகிறது. அந்த ஒரு இரவில் அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், உணர்வுப் பகிர்வுகள் தான் இந்த மெய்யழகன்.
நடிகர் கார்த்திக்கு இது காலத்துக்கும் சொல்லிக்கொள்ளும்படியான படம். வெள்ளந்தியான கிராமத்து மனிதராக மனிதன் கலக்கியுள்ளார். அத்தான் அத்தான் என்று உருகுவது, மற்ற உயிர்கள் மீது அன்பு வைப்பது, உறவுகளின் உன்னதத்தை மெச்சுவது என நடிப்பில் மிளிர்கிறார்.படத்தை தனது தோள்களில் சுமந்து உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரவிந்த் சாமிக்கு அட்டகாசமான கதாபாத்திரம். உறவுகளை மீண்டும் பார்த்த சந்தோஷத்தை முகத்தில் காட்டுவதாகட்டும், தன் மீது அதீத பாசம் வைத்திருக்கும் நபர் யார் என்று தெரியாத குற்ற உணர்ச்சியில் தவிப்பதாகட்டும் அசத்தியுள்ளார். கார்த்தி, அரவிந்த் சாமி இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
ஸ்ரீதில்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு படத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. முதல் பாதி கவிதை போல அத்தனை இதமாக இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வீரம், போர், தியாகம் என காட்சிகள் கதைக்கு அப்பாற்பட்டு நிற்பது குறை. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளின் நீளமும் கொஞ்சம் அதிகம். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் நன்று. கமல் பாடியுள்ள யார் இவன் தூய மெலடி. பின்னணி இசை அருமை. மகேந்திர ஜெயராஜுவின் ஒளிப்பதிவு தஞ்சை தெருக்கள், இரவுகளை அசத்தலாக காட்டியுள்ளது.
பிறந்த மண்ணை, உறவுகளை விட்டு எங்கோ வெகு தொலைவில் வசித்து வரும் மனிதர்களின் மன வலியை பதிவு செய்ய முயன்றுள்ள இயக்குனர் பிரேம்குமாருக்கு வாழ்த்துகள். மொத்தத்தில் மெய்யழகன் – அழகன்.ரேட்டிங 3.5/5.

