விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள “கோப்ரா” பட விமர்சனம்!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியுள்ள படம் கோப்ரா.
3 ஆண்டுகள் கழித்து விக்ரம் நடித்துள்ள படம் திரையரங்கில் வெளியாவதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதிலும் பல்வேறு கெட்டப்புகளில் விக்ரம் இந்த படத்தில் நடித்திருப்பதால் கூடுதல் கவனம் பெற்றது.
இப்படத்தின் கதை என்னவென்றால் பணத்திற்காக முதலமைச்சர் முதல் மற்ற நாட்டு அரசன் வரை அனைவரையும் கொலை செய்கிறார் கோப்ரா. கொலை செய்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க இன்டர்போல் அதிகாரியாக அஸ்லான் ( இர்ஃபான் பதான் ) குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இந்த கொலைகளை செய்வது யார் அதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை கண்டறிய சென்னை வருகிறார் இர்ஃபான் பதான்.
அதே நேரத்தில் மிகவும் சாதுவான ஆனால் கணக்கில் அதி மேதாவியான கணக்கு வாத்தியார் மதியழகனை (விக்ரம்) ஸ்ரீநிதி ஷெட்டி காதலிக்கிறார். சாதுவான கணக்கு வாத்தியார் ஏன் இந்த முக்கிய பிரமுகர்களை கொலை செய்கிறார். அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னஎ ன்பதே கோப்ரா படத்தின் கதை.
படத்தின் முதல் பாதியில் விக்ரம் பல கெட்டப்புகளில் வந்து அசத்தியுள்ளார். விக்ரமை பொருத்தவரை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது அவரது வழக்கம். அதே போல இந்த படத்திலும் ஒரு கதாபாத்திரத்திற்கும் மற்றொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு தன்னுடைய நடிப்பை வித்தியாசமாக மாற்றி விக்ரம் பாராட்டை பெற்றுள்ளார். பாடல் காட்சிகள், காதல், சண்டை காட்சிகள் என காட்சிக்கு, காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறார். மீண்டும் விக்ரம் கம்பேக் கொடுத்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீநிதி செட்டி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து பாராட்டை பெற்றுள்ளார். அதேபோல கே எஸ் ரவிக்குமார் தொடக்கம் முதல் இறுதி வரை தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. அதேபோல ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக உள்ளது.
முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லாதது சற்று பின்னடைவாகவே உள்ளது. குறிப்பாக விக்ரமுக்கு ஏற்படும் ஆலுசினேஷன் மற்றும் அதனால் உருவாகும் கதாபாத்திரங்களும் குழப்பத்தை உண்டாக்குகிறது. 3 படத்தில் வந்த ஆலுசினேஷன் கதாப்பத்திரங்கள் போலவே 5 கதாப்பாத்திரங்கள் இந்த படத்தில் வருகிறது. நிஜம் எது கற்பனை எது என்பதை புரிந்து கொள்வதற்குள் இன்னொரு ஃபிளாஷ் பேக் வருகிறது. அந்த ஃபிளாஷ் பேக் முடியும் போது மற்றொரு ஃபிளாஷ் பேக் என திணற செய்கிறது.
விக்ரமின் தோற்றங்களிலும் அதை காட்சிப்படுத்தும் விதங்களிலும் அக்கறை காட்டிய இயக்குனர் இரண்டாம் பாதி கதையில் சற்று கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். குறிப்பாக படத்தின் நீளம் மூன்று மணி நேரம் என்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
இப்படி சில குறைகள் இருந்தாலும் ஒரு வித்தியாசமான முயற்சியை சிறப்பாக கொடுத்து கோப்ரா படத்தின் மூலம் மீண்டும் விக்ரம் கம்பேக் கொடுத்துள்ளார் என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.