காந்தாரா சாப்டர் 1 திரை விமர்சனம்!
காந்தாரா சாப்டர் 1 திரை விமர்சனம்!
காந்தாரா படத்தோட மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது இந்த காந்தாரா சாப்டர் 1.. இந்த கதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாடி அரசர்கள் காலத்தில் நடக்குற மாதிரி அமைந்துள்ளது. ஈஸ்வர பூந்தோட்டம் என்ற காந்தாரா காட்டில் அமைதியான வாழ்ந்திட்டு இருக்கிறார்கள் நாயகன் மற்றும் அவரோட மக்கள்… பக்கத்தில் பாங்க்ரா என்ற நாட்டை ஜெயராம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்.. நாயகனோட குழு வியாபார ஆசையில் பாங்க்ரா ஆளுகைக்குட்பட்ட துறைமுகத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறார்கள். காந்தாராவோட வளத்தை குறிவைத்து கடம்பர் இனக்குழுவும் மூர்க்கமாக இயங்குகிறது ..ஒருபுறம் பாங்க்ரா அரசு, மறுபுறம் கடம்பர்கள் இனக்குழு. இரு எதிரிகளையும் காந்தாரா நில மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள். இதில் கடவுளின் பங்கு என்ன என்பதே காந்தாரா சாப்டர் 1..
முதல் பாகம் கொடுத்த மிகப் பிரமாண்டமான வெற்றியால் இந்த இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி.. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.. படத்தை தாங்குவதே ரிஷப் ஷெட்டிதான்.. சண்டைக்காட்சிகளில் அவரோட ஆக்ரோஷம் சிலிர்க்க வைக்கிறது.. சாமி வந்து அவர் ஆடும் ருத்ர தாண்டவம் படம் பார்க்கிறவங்களை உறைய வைக்கிறது.. நாயகி ருக்மிணி வசந்த் அழகு பதுமையாக ரசிக்க வைத்திருக்கிறார். அவங்களும் தன் கேரக்டரின் டெப்த்தை உணர்ந்து நல்லா நடித்திருக்கிறார். ஜெயராம் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்.. அவரோட மகனாக வரும் குல்ஷன் தேவய்யா வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.. ஆரம்பத்தில் குடி, கூத்து என இருக்கும் அவரது கதாபாத்திரம்
திடீரென செய்யும் செயல் எதிர்பாராதது.. மற்ற அனைவரது நடிப்பும் அருமையாக இருக்கிறது..
அஜ்னீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கள் தெய்வீக ராகம் என்றால் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.. கிளைமேக்ஸில் வரும் பாட்டும் பின்னணி இசையும் மிரட்டல்.. ஒளிப்பதிவாளர் ஒரு பேண்டஸி படத்துக்கான மூட்-ஐ அட்டகாசமாக தன் ப்ரேம்களுக்குள் பொருத்தியிருக்கிறார்.. காடுகளும் அந்த கிராமமும் அரண்மனையும் அத்தனை அழகு.. ஆர்ட் ஒர்க்கும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.. சண்டைக்காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது..குறிப்பாக கிளைமேக்ஸ் போர் காட்சிகள் தரமான சம்பவம்..
முதல் பாகத்தை போலவே இதிலும் முதல் பாதி சற்று அயற்சியை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி கதைக்குள் செல்ல கொஞ்சம் நேரம் எடுக்கிறது.. அதேபோல் முதல் பாகத்தில் இருந்த எமோஷனல் இதில் கொஞ்சம் குறைவாக இருக்கிறது எனலாம். ஆனால் டெக்னிக்கலாக பல மடங்கு உயர்ந்திருக்கிறது படம்..
பூர்வ குடிகள், அவங்களோட வழிபாடு, உழைப்பு, வாழ்க்கை முறை, பகை, துரோகம், வாழ்வியல் எல்லாம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.. மேக்கிங் பலமாக இருக்கிறது.. ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். முதல்பாதியைவிட இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது.. கடைசி அரைமணி நேரம் மற்றும் கிளைமேக்ஸ் அட்டகாசம்.. அடுத்த பாகத்திற்கான லீடும் சிறப்பான ஒன்று.. மொத்தத்தில் காந்தாரா சாப்டர் 1 வின்னர்..