இட்லி கடை திரைப்பட விமர்சனம்!
இட்லி கடை திரைப்பட விமர்சனம்!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம்தான் இட்லி கடை.. தனுஷ் அப்பா ராஜ்கிரண் சங்கராபுரத்தில் இட்லி கடை வைத்திருக்கிறார்.. அவருக்கு கடைதான் எல்லாம்.. ஊர் மக்களுக்கு சுவையான இட்லி கொடுப்பதுதான் தன் வாழ்வின் பெருமை என வாழ்ந்து வருகிறார்.. ஆனால் மகன் தனுஷிற்கோ சென்னையில் சென்று பெரிய வேலையில் சேர வேண்டும் என்று விருப்பம்.. அதன்படியை கேட்டரிங் படித்து வெளிநாட்டில் உள்ள சத்யராஜ் உணவு அலுவலகத்தில் பெரும் வேலையில் இருக்கிறார்.. சத்யராஜுக்கு உதவாக்கரை மகன் அருண் விஜய்.. தனுஷை கண்டால் இவருக்கு ஆகவே ஆகாது.. மகள் ஷாலினி பாண்டே தனுஷை காதலிக்க எதிர்ப்பு தெரிவிக்காமல் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் சத்யராஜ்.. திருமண ஏற்பாடுகள் நடக்க திடீரென தனுஷ் சொந்த ஊர் போக வேண்டிய அவசர தேவை.. ஊருக்கு போனவர் வெளிநாடு செல்ல மறுக்கிறார்.. அதற்கான காரணம் என்ன? திருமணம் நடந்ததா? ராஜ்கிரணின் கனவான இட்லி கடை என்ன ஆனது இதுதான் படம்..
தனுஷ் தன்னுடைய அப்பா கஸ்தூரி ராஜா பாணியில் ஒரு அழகான கிராமத்து படம் எடுக்க நினைத்துள்ளார்.. எமோஷனல் சீன்ஸ் நிச்சயம் பார்வையாளர்களை கலங்க வைத்துள்ளது.. தன்னுடைய முந்தைய படத்தைவிட இதில் சென்டிமென்ட் காட்சிகளில் சபாஷ் போட வைத்துள்ளார் தனுஷ்.. நடிப்பும் அருமையாக இருக்கிறது.. அப்பா ராஜ்கிரண் அவருக்கென்றே உருவாக்கியுள்ள கதாபாத்திரம் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார்.. அம்மா கீதா கைலாசமும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.. சத்யராஜ் பாசக்கார அப்பாவாக மகனுக்கு செல்லம் கொடுத்து பிரச்சினையில் சிக்கும் கதாபாத்திரம்.. அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்..
நித்யா மேனன் வழக்கம் போல அட்டகாசமான நடிப்பு.. கேலி, கிண்டல் செய்யும்போதும் எமோஷனல் காட்சிகளிலும் அழகாக நடித்துள்ளார்.. அருண் விஜய் ஈகோ பிடித்த நபராக வில்லத்தனத்தில் கலக்கியுள்ளார்.. இவருக்கும் தனுஷிற்குமான மோதல் ரசிக்க வைக்கிறது.. இளவரசு, பார்த்திபன், இட்லி கடையில் முதலில் சாப்பிட வரும் பெரியவர் என அத்தனை பேரின் நடிப்பும் சூப்பர்..
ஜீவி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.. பின்னணி இசையில் கலக்கியுள்ளார்.. சொந்த ஊர், சொந்த மண், மக்கள், உறவுகள், குலசாமி என நேட்டிவிட்டி கலந்து விருந்து வைத்துள்ளார் தனுஷ்.. முதல் பாதி மிகவும் அருமையாக இருக்கிறது.. இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.. மொத்தத்தில் வெளிநாட்டு வாழ்க்கை, காசு, பணம் என அழைந்தால் கடைசியில் திரும்பி பார்க்கும் போது கூட யாரும் இருக்க மாட்டார்கள் என்ற கசப்பான உண்மையை சொல்கிறது இந்த இட்லி கடை.. இந்த கடைக்கு தாராளமாக ஒரு ரவுண்ட் அடிக்கலாம்..