அஜித்தின் விடாமுயற்சி திரை விமர்சனம்!
விடாமுயற்சி விமர்சனம்!
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
அஜித்தும் த்ரிஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அஜர்பைஜானில் வாழ்ந்து வருகின்றனர். திருமணமாகி 12 ஆண்டுகள் கடந்த பிறகு த்ரிஷா விவாகரத்து கேட்கிறார். ஒரு நாள் இருவரும் காரில் சென்றுகொண்டிருக்கும்போது பாலைவனத்தின் நடுவே கார் திடீரென பிரேக் டவுன் ஆகிவிடுகிறது. அப்போது அந்த வழியாக வரும் அர்ஜுன் மற்றும் ரெஜினா தம்பதியிடம் அஜித் உதவி கேட்கிறார். நாங்கள் பக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று உதவிக்கு ஆட்களை அனுப்புகிறோம் என்று த்ரிஷாவையும் உடன் அழைத்து செல்கின்றனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வராததால் அஜித்துக்கு சந்தேகம் ஏற்படுகிறது. காரை சரி செய்துகொண்டு அந்த ஓட்டலுக்கு சென்று பார்த்தால் அங்கு த்ரிஷா இல்லை. த்ரிஷாவுக்கு என்ன ஆனது? அர்ஜுன் தம்பதி யார் என்பதே விடாமுயற்சி.
ஹாலிவுட் பிரேக் டவுன் படத்துக்கு இந்த படத்துக்கும் கதை மட்டுமே ஒற்றுமை. ஆனால் தனது அருமையான திரைக்கதையால் படத்தை ரசிக்கும் படி கொடுத்துள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. இது வழக்கமான மசாலா மாஸ் கமர்ஷியல் படம் கிடையாது. அஜித்துக்கு என மாஸ் சீன்கள் இல்லை. ஆனாலும் படம் நன்றாக உள்ளது. முழு படத்தையும் வழக்கம்போல் அஜித் தனது தோளில் சுமந்துள்ளார். இளம் வயது அஜித் பார்க்க அவ்வளவு அழகாக உள்ளார். அஜித், த்ரிஷா இடையேயான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
முதல் பாதி மெதுவாக நகர்வது போல் இருக்கும். த்ரிஷா அத்தனை அழகாக இருக்கிறார். த்ரிஷாவை சுற்றித்தான் கதை நகர்கிறது. அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். ஓம் பிரகாஷின் கேமிரா அஜர்பைஜான் அழகை அட்டகாசமாக காட்சிபடுத்தியுள்ளது. ஆங்கில படம் பார்த்த உணர்வு அவரது ஒளிப்பதிவு கொடுத்துள்ளது. அனிருத் கலக்கியுள்ளார். சவதீகா பாடல் மற்றும் பின்னணி இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டம். முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக உள்ளது.
மொத்தத்தில் விடாமுயற்சி – நல்ல முயற்சி